பிரதமர் மோடி சொன்னது போல் 356 ஐ தவறாக பயன்படுத்தவில்லை – ப. சிதம்பரம் விளக்கம்!

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எம்.பி நிதியில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த பின், ஆட்சியர் அலுவலக வாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பட்ஜெட் என்பது அரசு முதலீடு செய்து இந்த நாடு வேகமாக வளர்ந்துவிடும் என்கிற அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பு பொருளாதாரத்திற்கும், நடைமுறைக்கும் உகந்ததல்ல. தனியார் முதலீடு பலகோடி வந்தால்தான் நாட்டின் வளர்ச்சி விகிதம் கூடும்.

நடப்பாண்டில் 7.5 லட்சம் கோடி முதலீடு என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு 10 லட்சம் கோடி முதலீடு என அறிவித்துள்ளார்கள். ஆனால் 12 மாதத்தில் 7.5 லட்சம் கோடி கூட முதலீடு செய்ய முடியாத நிலையில், 10 லட்சம் கோடி முதலீடு என்பது ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போல்.10 லட்சம் கோடி முதலீடு என்றால் அதனை வரவேற்கிறேன். ஆனால் அது சாத்தியமில்லை. 100 நாள் வேலை திட்டம், சுகாதாரம் உள்ளிட்ட பல இனங்களுக்கு அறிவித்த தொகையை விட குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. 12 இனங்களில் 39 ஆயிரம் கோடி குறைவாக செலவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு செலவு செய்வார்களா என்றால் அதற்கும் சாத்தியமில்லை.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

உணவுக்கும், உரத்திற்கும் மாணியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும். பெட்ரோலியத்திற்கான மானியம் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. உணவுக்கும், உரத்திற்குமான மாணியம் குறைக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு பகிர்ந்து தரும் நிதி பல்லாயிரம் கோடி குறைத்து வழங்குகிறார்கள். அறிவிப்பது வேறு ஆண்டு இறுதியில் கணக்கெடுப்பது வேறு. இந்த ஆண்டு வளர்ச்சி அவர்கள் கூறியதுபோல் 7 சதவீதம் இருக்காது. காலாண்டு, காலாண்டு குறைந்துகொண்டே செல்லும். வளர்ச்சி என்பது காலாண்டு, காலாண்டு கூட வேண்டும். ஆனால் 4.5, 4.2 ஆக குறைந்துகொண்டே வருகிறது. ஆக இந்த ஆண்டு பல நாடுகளின் வளர்ச்சி குறையும் என கூறுகிறார்கள்.‌ பல நாடுகளில் எதிர்மறை வளர்ச்சி ஏற்படும் என சொல்லியுள்ளார்கள். உலக வர்த்தகம் இந்த ஆண்டு வேகமாக இருக்காது. உக்ரைன் போர், உலக நாடுகளில் பணவீக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உலகத்திற்கு சுபீட்சமாக இருக்காது. வளர்ச்சி விகீதம், வேலை வாய்ப்பு குறையும். பண வீக்கம் ஓரளவு குறையும். ஆனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாது. ஆகவே மத்திய அரசை எச்சரிக்கிறேன். பல முறை எச்சரிக்கவும் செய்கிறேன். எதிர் கட்சி எடுத்துதான் கூற முடியும். அரசு பாதையை திருத்திகொள்ள வேண்டும். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் 356 ஐ பயன்படுத்தவேண்டிய சூழல், பயன்படுத்தினோம். அதை இல்லை என மறுக்கவில்லை. தவறாக 356 பயன்படுத்தியிருந்தால் அன்றே தண்டித்திருப்பார்கள். மத்திய பா.ஜ.க அரசு எந்த அரசையும் கலைக்காமல் எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள். அன்மையில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளார்கள். ஆபரேசன் என்பது எதிர் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதுதான்.

356 ஐ பற்றி பேசிய பிரதமர் அதையும் பேசியிருக்க வேண்டுமல்லவா? அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. புகார் சொல்லாமல் தைரியமாக போட்டியிட வேண்டும். ஆளும் கட்சி சந்திக்கும் முதல் இடை தேர்தலில் அரசு சும்மா இருக்காது. முழு பலத்தையும் காட்டதான் செய்யும். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற இடை தேர்தலின்போது அமைச்சர்கள் வீட்டிலா இருந்தார்கள். அதிமுக உட்கட்சி பிரச்சனையில் ஒ.பி.எஸ், ஈ.பி.எஸ். என்கிற குணச்சித்திரங்கள் நீதிபதிகளுக்கு தெரியாது. 2024 வரை அதிமுக, பா.ஜ.க கூட்டனி நன்றாக தொடரட்டும். பா.ஜ.க என்கிற நச்சுப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து அதிமுக வரட்டும். அதனை வேண்டாம் என சொல்லவில்லை. அதானி, மோடி என்பதை அவரே மறுக்கவில்லையே. அதானி பிரச்சனையில் அரசை பாதிக்குமா? என்பதை அரசுதான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அரசு பதில் சொல்லவில்லையே?” இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.