பூகம்பத்தால் பாதித்த துருக்கியில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். இது குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் சஞ்சய் வர்மா கூறியதாவது:
“துருக்கியில் பூகம்பம் பாதித்த பகுதியில், பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர் ஒருவரை வர்த்தக பணிக்காக அனுப்பியிருந்தது. அவரை கடந்த 2 நாட்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினரும், பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திடமும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்பில் உள்ளது.
துருக்கியின் தொலை தூர பகுதியில் இந்தியர்கள் 10 பேர் சிக்கியுள்ளனர். ஆனால், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். துருக்கியின் அதானா நகரில் இந்தியா சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் 75 பேர் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் மற்றும் உதவி கேட்டுள்ளனர்.
துருக்கியில் இந்தியர்கள் சுமார் 3,000 பேர் உள்ளனர். இவர்களில் 1,800 பேர் இஸ்தானபுல் நகரை சுற்றிலும், 250 அங்காரா பகுதியிலும், மீதப் பேர் துருக்கியின் பல பகுதிகளிலும் உள்ளனர்” என்று அவர் கூறினார்.
இந்தியா உறுதுணை: துருக்கி மற்றும் சிரியாவுக்கு இந்தியாவும் விமானப்படையின் ஐந்து சி-17 ஜம்போ விமானங்களில் 108 டன்களுக்கு மேல் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. 6-வது ஜம்போ விமானத்தில் நிவாரண பொருட்களை அனுப்புவது பற்றியும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அதிகளவில் சடலங்கள் மீட்பகப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்து விட்டது. பலர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.