அங்காரா: பூகம்ப மீட்பு நடவடிக்கைகளில் எர்டோகன் அரசு சிறப்பாக செயல்படவில்லை என துருக்கி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
துருக்கியில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. துருக்கி – சிரிய எல்லையில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு இதுவரை 21,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் 20 வருடங்களாக துருக்கியில் ஆட்சியில் இருந்து வரும் எர்டோகன் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வரும் மே மாதம் துருக்கியில் பொதுத் தேர்தல் நடக்கும் நிலையில் இந்த இயற்கை பேரிடர் எர்டோகனின் அரசியல் பயணத்தில் பெரும் அடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் பூகம்பத்தினால் கடுமையாக பாதிப்படைந்த 10 மாகாணங்களுக்கு அவசர நிலையை பிறப்பித்திருக்கிறார் எர்டோகன்.
இதற்கிடையில் பூகம்பம் மீட்பு நடவடிக்கைகளில் எர்டோகன் அரசு மீது துருக்கி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்ரிவெர்டியின் பகுதியும் ஒன்று.
தன்ரிவெர்டி பகுதியை சேர்ந்த ஒருவர் மீட்புப் பணிகள் குறித்து கூறும்போது, “ எங்களுக்கு யாரும் உதவவில்லை. பூகம்பம் ஏற்பட்ட பிறகு இரண்டாவது நாள் மதியம்வரை இங்கு யாரும் வரவில்லை. அரசோ, போலீஸோ, ராணுவமோ யாரும் வரவில்லை. எங்களை தனியாகவிட்டு விட்டார்கள். இதுவரை எங்கள் பகுதிக்கு பிரதமர் வரவில்லை.” என்று தெரிவித்தார்.
மற்றொருவர் கூறும்போது, “ என்னிடம் சிறிய ட்ரில் இருந்திருந்தால் நான் என் உறவினரை காப்பாற்றி இருப்பேன். ஆனால் இல்லை. அவர் இறந்திவிட்டார்.பூகம்பத்தால் இறக்காவதவர்கள் நிச்சயம் இங்கு நிலவும் கடும் குளிரால் இறந்து விடுவார்கள்” என்று தெரிவித்தார்.