பெங்களூரு: பெங்களூருவை அடுத்துள்ள ஆனேக்கல் அருகேயுள்ள தீபஹள்ளியில் செயின்ட் ஜோசப் சாமினேட் அகடமி பள்ளி உள்ளது. இதில் யூகேஜி படித்த சிறுமி நந்தினி (6) தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, நந்தினி ஒரு பாடத்தில் 40-க்கு 5 மதிப்பெண் மட்டும் எடுத்ததால் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவியின் தந்தை மனோஜ் ஃபாதல் கூறுகையில், “6 வயது குழந்தையை தேர்வில் தோல்வி அடைய செய்யவைப்பது சரியான அணுகுமுறை அல்ல. இதனால் குழந்தையின் மனம் புண்படும். பள்ளி நிர்வாகம் இந்த விஷயத்தை சரியாக கையாளவில்லை. இதுகுறித்து பள்ளியின் தாளாளரிடம் பேசிய பிறகு, தேர்வு முடிவை பரிசீலிப்பதாக பதிலளித்துள்ளனர்” என்றார்.
ஆனேக்கல் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி கூறும்போது, ‘‘யூகேஜி சிறுமியை தேர்வில் தோல்வி அடைய செய்தது ஏன்? இதுகுறித்து 2 தினங்களில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி திரும்பப் பெறப்படும்” என்று எச்சரித்து பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.