முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-2024ம் ஆண்டு நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில்,முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என்று மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிபடத் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வை தள்ளி வைக்கக் கோரி கோரிக்கை எழுந்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தேர்வை தள்ளி வைக்க இந்திய மருத்துவர் சங்கம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தன. இதுகுறித்து பேசிய ஒன்றிய அமைச்சர்; மார்ச் 5 அன்று தேர்வு நடத்தப்பட வேண்டும்.

இது 5 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்கள் இதற்காகத் தயாராகி வருகின்றனர். முன்னதாகத் தேர்வுகள் 7 முதல் 8 மாதங்கள் வரை தாமதமாகின. சில தேர்வுகள் 4 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டன. இப்போதும் தள்ளி வைத்தால், அதே சூழல் ஏற்படும். அதனால் இதைச் சரிசெய்ய வேண்டியது அவசியம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.