புதுடெல்லி: பிபிசி ஆவணப்படத்திற்கு முழு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதில், மோடியின் பங்களிப்பு குறித்து சர்வதேச செய்தி ஊடக நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
இந்த ஆவணப்படத்தின் வீடியோ மற்றும் இணைப்புகளை சமூக ஊடகங்களில் பகிர ஒன்றிய அரசு தடை விதித்தது.இந்நிலையில் இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ஆவணப்படத்தின் மூலமாக இந்தியா குறித்த பார்வையை பிபிசி நிறுவனம் களங்கப்படுத்துகிறது. அதனால் அந்த ஆவணப்படத்திற்கு முழு தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படம் எப்படி ஒட்டுமொத்த இந்தியாவை பாதிக்கும்?’ என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மனுவை விசாரிக்க மறுத்ததோடு, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.