16 பேர் எங்கே? – விழுப்புரம் அருகே தனியார் ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆசிரமத்தில் காணாமல்போன நபர்கள் குறித்து அதிகாரிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கேபிஎன் காலனியைச் சேர்ந்தவர் ஹனிபா மகன் ஹாலிதீன். இவருடைய நெருங்கிய நண்பரான ஈரோட்டைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்காவில் தங்கி சுயதொழில் செய்து வருகிறார். இதையடுத்து, சலீம்கான் உறவினர் ஜபருல்லாவின் மனைவி, பிள்ளைகள் இறந்த நிலையில், அவர் யாருடைய பராமரிப்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சலீம்கான் தனது நண்பர்கள் உதவியுடன், விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அன்புஜோதி ஆசிரமத்தில், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜபருல்லாவை சேர்த்துள்ளார். இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் இருந்து ஈரோடு வந்த சலீம்கான், குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தனது மாமா ஜபருல்லாவை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது, ஜபருல்லா ஆசிரமத்தில் இல்லை. இதுபற்றி, சலீம்கான் ஆசிரம இயக்குநர் அன்பு ஜூபினிடம் கேட்டபோது, பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஜபருல்லாவை சேர்த்து விட்டதாகக் கூறியுள்ளார். அதன்படி, சலீம்கான் பெங்களூரில் உள்ள அந்த ஆசிரமத்திற்கு சென்று பார்த்தபோது, ஜபருல்லா அங்கேயும் இல்லை. இதுபற்றி, சலீம்கான் மீண்டும் அன்பு ஜோதி ஆசிரம இயக்குநர் அன்பு ஜூபினிடம் கேட்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலைத் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சலீம்கான் நண்பர் ஹாலிதீன் கெடார் காவல் நிலையத்திற்கு, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி கடிதம் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார். அப்புகாரின் பேரில், போலீஸார் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, செஞ்சி் டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜம்பாள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கவேல் ஆகியோர் தலைமையிலான பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் புகாருக்குள்ளான ஆசிரமத்தில் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த விசாரணையில், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைக் கொண்டு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில், ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், ஆசிரமத்தில் இருக்க வேண்டிய 137 பேரில் 121 பேர் மட்டுமே தற்போது ஆசிரமத்தில் உள்ளதாகவும், ஆசிரமத்தில் இருந்து காணாமல்போன 16 பேர் என்ன ஆனார்கள், அவர்களின் கதி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காணாமல்போன நபர்கள் குறித்து, ஆசிரமத்தின் உரிமையாளரான அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஆகியோரிடம் போலீஸார் விசாரித்து வருவதில், அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால், போலீஸாருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே, மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறை துணை இயக்குநர் பொற்கொடி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்களை மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆசிரத்தில் இருப்பவர்களில் நல்ல மன நிலையில் இருக்கிறார்கள் என மருத்துவர்கள் சான்று அளிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.