Gold Hunt: கடலுக்குள் மூழ்கினால் கிடைத்தது தங்கம்! 20 கிலோ கடத்தல் தங்கத்தை கைப்பற்றிய இந்தியா

ராமநாதபுரம்: நேற்று இலங்கையிலிருந்து நாட்டுப் படகு மூலம் கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகள் நிரம்பிய மூட்டையை அதிகாரிகளை கண்டதும் கடத்தல்காரர்கள் நடுக்கடலில் வீசினர். இந்த நிலையில் இரண்டாம் நாளாக இன்று தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது  ஆழ் கடலுக்குள் கிடந்த தங்க கட்டிகள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு கடற்கரை பகுதி அருகே தங்கம் கடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து சோதனை செய்ததில் நடுக்கடலில் தங்கத்தை தூக்கி வீசிய மூன்று பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்தல் நடைபெற உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக இலங்கையிலிருந்து  விரைவாக வந்த நாட்டுப்படகை நிறுத்த எச்சரித்தபோது படகில் இருந்தவர்கள் சில பொருட்களை கடலில் வீசி உள்ளனர். விரைந்து சென்ற அதிகாரிகள் படகில் இருந்த நாகூர்மீரான் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

கடலில் வீசப்பட்ட பொருட்களை மீட்க ஆழ்கடலுக்குள் செல்லும் திறன் பயிற்சி பெற்ற  ஸ்கூபா டைவிங் எனப்படும்  நீர்மூழ்கி வீரர்களை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் வீசப்பட்டது பல கோடி மதிப்பிலான தங்கமாக இருக்கக்கூடும் என முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நாகூர்மீரான் மீது தங்கம் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுக்கடலில் நேற்று  வீசப்பட்ட  பல கோடி மதிப்புள்ள தங்கக்கட்டி மூட்டையை நேற்று முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

இந் நிலையில், இன்று இரண்டாம் நாளாக  அதிநவீன சாதனங்கள் மூலம் பாதுகாப்பு அதிகாரிகள் கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது ஆள் கடலுக்குள் கிடந்த தங்க கட்டிகளில் இதுவரை 20 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.