”அக்கறையில்லாத பட்ஜெட்” – தமிழ்நாடு முழுவதும் நகல் எரிப்பு போராட்டம்! விவசாயிகள் கைது

தமிழ்நாடு முழுவதும் மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய சங்கத்தினர் ’பட்ஜெட் நகலை எரிப்பு’ போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டை கண்டித்தும், கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை குறைத்ததை கண்டித்தும், மத்திய நிதி பட்ஜெட்டில் விவசாயத்திற்கு சலுகைகள் வழங்கவில்லை எனக் கூறியும் தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகர் எரிப்பு போராட்டம் நடத்தினர் அது பற்றிய ஒரு தொகுப்பு.
image
போடி:
போடி திருவள்ளுவர் சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக திருவள்ளுவர் சிலை அருகே நின்று விவசாயத்திற்கு நிதி ஒதுக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.
இதையடுத்து தங்கள் கைகளில் வைத்திருந்த மத்திய அரசின் நிதி பட்ஜெட் நகல்களை தீயிட்டு எரிக்க முயன்றனர். அதனை அங்கிருந்த போலீசார் தடுத்து நகல்களை கைப்பற்றியதால் வாக்குவாதம் ஏற்பட்டு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
image
கடலூர் மாவட்டம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டை கண்டித்தும், கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைத்ததை கண்டித்தும், பட்ஜெட் நகலை எரித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நாகை மாவட்டம்:
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் துரோகம் செய்து கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்திட வலியுறுத்தி மத்திய அரசின் பட்ஜெட் நகலை தீயிட்டு எரிக்க முயன்றனர். அப்போது பட்ஜெட் நகலை எரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
image
மயிலாடுதுறை மாவட்டம்:
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலன்களை முற்றிலுமாக புறக்கணித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக கூறி மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் துரைராஜ் தலைமையில் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம்:
குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பாக குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றிய அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடைபெற்றது, தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் நிதிநிலை அறிக்கை குறித்த விளக்க உரையாற்றினார்கள், போராட்டம் நிறைவில் நிதிநிலை அறிக்கை நகலை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்,
image
மதுரை மாவட்டம்:
மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என விவசாய சங்கங்கள் கூறிவந்த நிலையில் இன்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக சமயநல்லூர் அருகே மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பட்ஜெட்டில் உரம் மானியத்துக்கு ரூ.54,000 கோடியை குறைத்து தாக்கல் செய்திருப்பதை கண்டித்து போராட்டத்தில் விவசாயிகள் கோஷமிட்டனர்.
தேனி மாவட்டம்:
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் தொழிற்சங்க தலைவர்கள் ராஜேந்திரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் நடந்த நகல் எரிப்பு போராட்டத்தில், கிராமப்புற விவசாயிகள் மற்றும் விவசாயி தொழிலாளர்கள் வாழ்வை வஞ்சிக்கும் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட் குறித்து விமர்சனமும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மத்திய பட்ஜெட் நகல் எரிக்க முயன்சி செய்தனர். அப்போது போலீசார் தடுத்து பட்ஜெட் நகல்களை பறிமுதல் செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.