அந்தக் காட்சியைப் பதிவு செய்தபோது என் கண்கள் கலங்கின.. – துருக்கி புகைப்படக் கலைஞரின் துயர அனுபவம்

தனது 40 வருட புகைப்படத் தொழிலில் தான் எடுத்த பிற புகைப்படங்களுடன் இதனை ஒப்பிட முடியாது என்கிறார் துருக்கி புகைப்படக் கலைஞர் அல்தான்.

துருக்கி – சிரிய பூகம்பத்தின் கோர முகத்தை நாளும் வெளியாகும் புகைப்படங்கள் நமக்கு உணர்த்தி வருகின்றன. அந்த வகையில் உலக மக்களின் மனதை உடைக்கும் புகைப்படத்தை எடுத்த தனது அனுபவத்தை பகிர்கிறார் அல்தான்.

”துருக்கி -சிரிய எல்லையில் பூகம்பம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அங்காராவிலிருந்து தெற்கு துருக்கிக்கு விரைந்து சென்றேன். நான் சென்ற வழி முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்துகிடந்தன.

சரிந்த கட்டிடங்களில் சிக்கியுள்ள உறவினர்கள் வெளியே வருவார்களா என்று மக்கள் கண்ணீருடன் காத்திருந்தனர். அப்போதுதான் அந்த மனிதரை நான் பார்த்தேன். அவர் ஆரஞ்சு நிற கோர்ட் அணிந்து உட்கார்ந்திருந்தார். அவரது கைகளை உற்று நோக்கும்போதுதான் தெரிந்தது அவர் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த புகைப்படத்தை நான் எடுத்தேன்.

அந்த நபரின் பெயர் மிசுத், இடிபாடுகளில் அவர் பிடித்திருக்கும் கை அவரது 15 வயது மகள் இர்மாக்குடையது. பூகம்பத்தால் படுக்கையிலே இக்மார்க்கின் உயிர் பறிபோகி இருக்கிறது. அந்த நிலையில்தான் இக்மார்க்கின் கைகளை மிசுத் பிடித்திருந்தார்.

அவரிடம் நான் உங்களை புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன் அவர் எடுத்து கொள்ளுங்கள் என்றார். அவர் உணர்வற்று கிடந்தார். அந்தக் காட்சியை புகைப்படமாக எடுக்கும்போது என் கண்களும், மனமும் கலங்கியது. அந்த சிறுமி நீண்ட நேரம் அந்த இடிபாடுகளில் இருந்தார். யாரும் அங்கு வரவில்லை. அடுத்த நாள் அந்த இடத்திற்கு நான் சென்று பார்க்கும்போது இருவரும் அங்கு இல்லை” என்று கூறி இருக்கிறார் அல்தான்.

துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 24,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.