இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளா? – பிப்ரவரி 13 முதல் கொரோனா பரிசோதனையில் தளர்வு!

வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் சீனா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து இந்தியா வரும் சர்வதேசப் பயணிகள், பயணத்துக்கு முன்பான கொரோனா பரிசோதனை சான்றிதழ் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகையே இரண்டு வருடங்களாக ஆட்டிப் படைத்தது. அதன்பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகளால் கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிய நிலையில், கடந்த மாதம் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத் தூக்கியது. ஒமிக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் தான் இதற்கு காரணம் என்றும், இந்த கொரோனா அதிவேகத்தில் பரவும் என்றும் கூறப்பட்டது. சீனா மட்டுமின்றி கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த புதிய திரிபு அதிவேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வந்தது கவலை அளித்த நிலையில், இந்தியாவிலும் 4 பேர் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்தது.

RT-PCR test has been made mandatory for flyers coming from China, Hong Kong, Japan, South Korea, Singapore and Thailand from 1st January 2023. They will have to upload their reports on the Air Suvidha portal before travel.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 29, 2022

இதனைத் தொடர்ந்து ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம் என்றும், மேலும், பயணத்திற்கு முன் பயணிகள் தாங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவுறுத்தியிருந்தார். சர்வதேசப் பயணிகள், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது. 
இந்நிலையில், சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், புறப்படுவதற்கு முன்பான கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் இருந்து பிப்ரவரி 13-ம் தேதி முதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியரில் 2 சதவீதத்தினரை, விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை மட்டும் தொடருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.