2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா நெருக்கடி, கனமழை, வெள்ளம் என அசாதாரணமான சூழலை ஸ்டாலின் அரசு கையாண்டது. முதல்வர், அமைச்சர்களின் நடவடிக்கை மட்டுமல்லாமல் அரசு இயந்திரத்தின் வேகத்துக்கு அதிகாரிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். இறையன்புக்கு தலைமைச் செயலாளர் பதவியை ஸ்டாலின் வழங்கியபோது பல தரப்பினரும் வரவேற்றனர். ‘தலைமைச் செயலாளர் இறையன்புக்கு பொதுவாக சமூகத்தில் நல்ல பெயர் உண்டு. நல்ல நிர்வாகியும் கூட. தன் பணிகளைக் கடந்து அவரின் எழுத்துகளும், பேச்சுகளும் அதிகம் கவனிக்கப்பட்டன.
நாகை மாவட்ட துணை ஆட்சியரில் ஆரம்பித்து காஞ்சிபுரம் ஆட்சியர், பிறகு செய்தித்துறை, சுற்றுலாத்துறை எனப் பல துறைகளில் இருந்தவர். இறையன்பு ஏராளமான மேடைகளில் சொல்வீச்சில் ஆர்வம் காட்டுவார். சேனல்களிலும் சிறப்பு நிகழ்வுகளில் பேசுவார். அத்துடன் இல்லாமல் உளவியல், வர்த்தக நிர்வாகம், ஆங்கில இலக்கியம், மேலாண்மை.. எனப் பலவற்றை படித்து தேர்வெழுதி பல டாக்டரேட் பட்டங்களை வாங்கிக் குவித்தவர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
`மக்கள் பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க வேண்டும். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தினமும் 10,000 மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும் மக்கள் காத்திருப்பதைப் பார்க்கும்போது மனம் கனக்கிறது. குறைவான மனுக்கள் வரும் மாவட்டத்துக்கு கேடயம்’ என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியது; சென்னை மழைநீர் வடிகாலுக்கு நேரடியாக ஆய்வுக்குச் சென்று அதிகாரிகளை முடுக்கிவிட்டது; சாலை அமைக்கும்போது ஏற்கெனவே இருப்பதற்கு மேலே போடாமல், பெயர்த்து எடுத்துவிட்டுத்தான் போட வேண்டும் என்று ஆலோசனை வழங்கியது; குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு பார்ப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது; ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை; விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண் அலுவலர்களுக்கு ஆலோசனை; பொன்னாடை போன்ற அலங்கார நடவடிக்கைகளைத் தவிர்த்து புத்தகங்கள் பரிசளிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள்… என அடுக்கலாம் அவரின் தலைமைச் செயலாளர் பதவிக் காலத்தை.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்புவின் பணிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. தலைமைச் செயலாளர் இறையன்புவின் பணிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தால் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இறையன்பு அதற்கு மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இது குறித்து மேலும் தொடர்ந்தவர்கள், “தமிழ்நாட்டில் தகவல் ஆணையராக (RTI) பணியாற்றிய ராஜகோபாலின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு மாதங்களாக அந்தப் பதவி காலியாகவே இருக்கிறது. அந்த இடம் அவருக்கு வழங்கப்படலாம் என்ற தகவல் இருக்கிறது. அவ்வாறு அந்தப் பணிக்குச் சென்றால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் இருக்கலாம். அதோடு தமிழ்நாடு அரசுத் துறைகளுக்குப் பணியாளர்களை நியமிக்கும் டிஎன்பிஎஸ்சி-யின் தலைவர் பொறுப்பும் வழங்க முதல்வர் தரப்பு ஆலோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், ஓய்வுபெறும் இறையன்புக்கு அடுத்து தலைமைச் செயலாளர் இடத்துக்கு வருவதற்கு பல அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்களாம். அவர்களில் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக இருக்கும் ஷிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அதுல்யா மிஸ்ரா, முருகானந்தம் பெயர்கள் இந்த ரேஸில் அதிகமாக அடிபடுகின்றன. இதில் ஷிவ்தாஸ் மீனாவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது மத்திய அரசுப் பணியிலிருந்த ஷிவ்தாஸ் மீனாவை தன் துறைக்கு கொண்டுவந்தார் ஸ்டாலின். 1989 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜெய்ப்பூரிலுள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இதைத் தொடந்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். முப்பது வருட ஐ.ஏ.எஸ் அனுபவம் கொண்ட ஷிவ்தாஸ் மீனா அடுத்த புதிய தலைமைச் செயலாளராகப் பதவியேற்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது” என்கிறார்கள்.