ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகின்றனர். தினமும் காலையும், மாலையும் பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இரு தரப்பினராலும் எழுப்பப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கும் பட்டுவாடா நடைபெற்றதாக திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளால் குற்றம்சாட்டப்படுகிறது.
தினமும் தி.மு.கவினரின் தேர்தல் பிரசாரத்திலும், பொதுக் கூட்டங்களுக்கும் செல்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பிரசாரம் முடிந்ததும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என அதிமுக-வினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்துக்குள்பட்ட கிருஷ்ணம்பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரம் முடிந்ததும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனை வாங்கிக்கொண்டு பணப் பட்டுவாடா நடப்பதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன்உண்ணிக்கு தகவல் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திருப்பூர் மாவட்டம், தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் சர்புதீன் என்பவரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, காரில் டோக்கன் இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் உறுதி செய்தனர். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து அவரின் பெயர், வாகனப் பதிவெண் ஆகியவற்றை கொண்டு தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. தற்போது பிடிபட்ட நபர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவகுமாரிடம் கேட்டபோது, “அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எனக்கு தகவல் இல்லையே…” என்றவர், `நீங்க டோல் ஃப்ரீ நம்பருக்கு போன் பண்ணிக் கேளுங்க பிரதர்…’ என்று முடித்துக்கொண்டார்.
அதற்கு நாம், `டோல் ஃப்ரீ நம்பரில் கேட்ட போது, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்கள்’, என்றோம்.
அதற்கு பதிலளித்த ஆணையாளர் சிவகுமார், `நீங்கள் சொன்ன தகவல் பற்றி விசாரித்து விட்டு நானே கூப்பிடுறேன் பிரதர்…’ என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

தி.மு.க ஒன்றிய பொருளாளர் சர்புதீனின் வாகனம் சோதனைக்குள்ளான விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், அந்த விஷயமே தனக்கு தெரியாது என்று கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.