கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அரசாணையில் பெண்கள் பெயரை வெளியிட்டது குறித்து, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக் கோரியும், சென்னையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த பொதுநல கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரின் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கையும் முழுமையாக விசாரிக்கவில்லை.
சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
மேலும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
இதுகுறித்து, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தமிழக முதல்வரின் முகவர் துறையிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் வரும் 13 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.