PM Modi Doppelganger: உலகத்தில் நம்மை போன்ற 7 பேர் இருப்பார்கள் என்ற கூற்று பல ஆண்டுகளாக உள்ளது. இரட்டையர்கள், தந்தை, தாத்தா போன்றே இருப்போரை தவிர்த்து, நம்மை போன்ற உடல்வாகும், முக அமைப்பும் கொண்டவர்களை காண்பது அரிதிலும் அரிது. ஆனால், சிலரின் முகத்தோற்றம் அப்படியே இல்லை என்றாலும், சில அங்க அடையாளங்கள் ஒத்துப்போகும்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் விஜய், அஜித், சூர்யா போன்றோரின் தோற்றத்தில் இருப்பவர்கள் வசனம் பேசி வீடியோ போடுவதை நாம் பார்த்திருப்போம். அதேபோல, தேர்தல் பரப்புரையின் போதும், எம்ஜிஆர், கலைஞர் ஆகியோரை போன்றே இருப்பவர்களுக்கு கிராக்கி வருவதையும் நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில், பிரதமர் மோடியை போன்ற இருப்பவர்தான் தற்போது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளார். அதாவது, இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை போன்றே அச்சு அசலாக இருக்கும் ஒருவர், பானி பூரி விற்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. முக அமைப்பில் மட்டுமின்றி, தாடி, மீசை, சட்டை என அனைத்திலும் மோடியை போலவே இருந்ததால், பலரும் குழப்பமடைந்தனர்.
இவரும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வசிப்பவர் என்பது தெரியவந்தது. அனில் பாய் தாக்கர் என்ற அவர் பிரதமர் மோடியை போன்ற மஞ்சள் மேற்சட்டையை அணிந்து, அந்த பானி பூரி விற்கும் வீடியோவில் தோற்றமளிக்கிறார். அதில் பேசும் அவர்,”அவர் டீ விற்றார். நான் பானி பூரி விற்கிறேன். பெரிதாக எங்களுக்கு இடையே வித்தியாசமில்லை” என்றார்.
பலரும் அந்த வீடியோவை பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதில், ஒருவர்,”பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நீங்கள் நடிக்கலாம். முயற்சித்து பாருங்கள் என கமெண்ட் செய்திருப்பது பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.