புதுடெல்லி: கடும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக கடைப்பிடிக்க விடுக்கப்பட்ட அழைப்பை விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றது. பிப்ரவரி 14ம் தேதி உலக நாடுகளில் காதலர் தினமாக கொண்டாப்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் இந்த கலாசாரம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்துக்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து காதலர் தினம் இளைஞர்களால் குதூகலமாக கொண்டாப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் சார்பாக திடீரென ஒரு வேண்டுகோள் வெளியானது. இதில் இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியை பசுக்கள் அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியது. சர்ச்சைகளும் வெடித்தன. இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் தனது அறிவுறுத்தலை திரும்ப பெற்றுள்ளது.
இது குறித்து விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் எஸ்கே தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணையத்தின் வழிகாட்டுதலின்பேரில், பிப்ரவரி 14ம் தேதி பசு அணைப்பு நாளாக கொண்டாடுவதற்காக விலங்குகள் நல வாரியம் விடுத்த அறிவுறுத்தல் திரும்ப பெறப்படுகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பர்சோட்டம் ரூபாலா, இந்த நாட்டில் பசுவை வணங்கும் பாரம்பரியம் பழமையானது. மக்கள் பசுவை அரவணைப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். மக்கள் எங்கள் வேண்டுகோளுக்கு சாதகமாக பதில் அளித்தால் நல்லது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.