கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பாலேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வெளியே சென்ற பாபு வீடு திரும்பாதால் அவருடைய மனைவி ராஜேஸ்வரி தேடி உள்ளார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்ட பாபு தன்னை சிலர் காரில் கடத்திக்கொண்டு புதுச்சேரிக்கு செல்வதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட ராஜேஸ்வரி கந்திகுப்பம் காவல் நிலையத்தில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
ராஜேஸ்வரி அளித்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் பாபுவின் செல்போன் எண் சிக்னலை வைத்து பின் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் பாபு கடத்தப்பட்ட காரை மடக்கிப் பிடித்தனர்.
காரில் இருந்த பாபுவை மீட்ட போலீசார் கடத்தல் கும்பலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சக்திவேல் என்பவரிடம் பாபு கடனாக ரூ.98 லட்சத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் இருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் பாபுவை கடத்தியதாக போலீசாரிடம் சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சக்திவேலை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.