பா.ஜ., மாநில செயலர் வினோஜ் பி.செல்வம் பேட்டி:
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது கூறியது போல், டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
சரியாப் போச்சு… அவங்க எதிர்க்கட்சியா இருக்கும் போது சொன்ன மாதிரி, இழப்பீடு, ஊதிய உயர்வு, நிவாரணம், நிதி ஒதுக்கீடு எல்லாம் இப்ப வழங்கணும்னா, ‘சுவிஸ் பேங்கை’ சுரண்டி எடுத்தா கூட போதாது!
மார்க்சிஸ்ட் கம்யூ., அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி:
புதுச்சேரியில் தற்போது, பா.ஜ., பங்கேற்றுள்ள கூட்டணி ஆட்சி நடக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில், முதல்வர் ரங்கசாமி இரட்டை வேடம் போடுகிறார்; இந்த விவகாரத்தில், அவர் பதவி விலக வேண்டும்.
அவராவது, இரட்டை வேடம் தான் போடுறாரு… ஆனா, தி.மு.க., கூட்டணிக்காக கொள்கைகளை மறந்துட்டு, கொஞ்ச நாளாகவே உங்க தமிழக தோழர்கள் பல வேடங்கள் போட்டுட்டு இருக்காங்களே!
தமிழக அரசின் பாடநுால் கழக முன்னாள் தலைவர் லியாகத் அலிகான் பேட்டி:
பன்னீர்செல்வம்அணியில், சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலராக இருந்தேன். பா.ஜ.,வின் சித்து விளையாட்டில் பன்னீர்செல்வம் சிக்கி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தன் அரசியல் நிலைப்பாட்டில் மாறி, மாறி முடிவு எடுத்து வருவதால், அவரது அணியிலிருந்து விலகி விட்டேன்.
இப்படி அவசரப்பட்டு விட்டீங்களே… தன் ஆதரவாளர்கள் அவ்வளவு பேருக்கும் ஏதாவது ஒரு பதவி கொடுத்துட்ட பன்னீர்செல்வம்,இப்ப உங்க பதவிக்கு, புதிய நிர்வாகியை எங்க போய் தேடுவார்?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த வரை செல்வாக்கு பெற்றிருந்த இரட்டை இலை சின்னத்தை வைத்து, நான்கு ஆண்டுகள்பழனிசாமி உள்ளிட்டோர் வித்தைகள் காட்டினர். தற்போது, இரட்டை இலை சின்னத்துக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வினர் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களால் இரட்டை இலை சின்னத்தை வைத்து, வெற்றி பெற முடியாது.

மக்கள் மனதில் பதிந்த இரட்டை இலை சின்னத்திற்கே செல்வாக்கு குறைஞ்சிடுச்சுன்னா, அடுத்தடுத்த தேர்தல்களில் உங்க, ‘குக்கர்’ விசில் அடிக்குமா?
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் என்ற கட்சியின் பெண் வேட்பாளர் மேனகா பேட்டி:
மக்களுக்கான ஒரு பிரச்னை என்றால், அது என்னுடைய பிரச்னை தான். அனைத்து சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். சீமான் சொன்னது போல, சாதிப்பதற்கு அதிகாரத்தை பிடிக்க வேண்டும். அதற்கான முதல்படி தான் ஈரோடு கிழக்கு; அங்கு வெல்வதே இலக்கு.
சாதிப்பதற்கு, சம்பாதிப்பதற்கு என எல்லாத்துக்குமே அதிகாரம் முக்கியம் தான்… அது, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு கிடைக்காது!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்