திரைக்கதை வங்கி துவக்கம்

பணத்தை போட்டு வைத்து தேவையான போது எடுத்துக் கொள்ள வங்கி இருப்பதை போன்று திரைக்கதையை பதிவு செய்து வைத்து அதனை தேவையானபோது எடுத்துக் கொள்ளவும், அல்லது தேவைப்படும் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கவும் திரைக்கதை வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை பாடலாசிரியர் மதன் கார்க்கியும், தயாரிப்பாளர் தனஞ்செயனும் இணைந்து உருவாக்கி உள்ளனர். இதனை பாரதிராஜா துவக்கி வைத்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர் புதிய முயற்சி தான் ‛ஸ்கிரிப்டிக்' எனப்படும் திரைக்கதை வங்கி.

தற்போது உருவாகும் பெரும்பாலான திரைப்படங்களின் திரைக்கதைகள் அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, தோல்வி அடையும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். இதை கருத்தில் கொண்டு, ஸ்கிரிப்டிக் வழங்கும் திரைக்கதைகளின் தரம் அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவால் உறுதி செய்யப்படுகிறது. எனவே, ஸ்கிரிப்டிக்-லிருந்து பெறப்பட்ட திரைக்கதைகள், திரைப்படங்களாக உருவாக்கப்படும்போது பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை அவை பெறும் என்பதை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நம்பலாம்.

பல சுயாதீன திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்குவதும், அவர்களின் பணிக்கு உரிய ஊதியம் வழங்குவதும் இதன் இலக்காகும். திரைப்படங்களுக்கான கதைகள் எழுதும் தொழிலைத் தேர்ந்தெடுக்க, அதிக எண்ணிக்கையிலான திரைக்கதை எழுத்தாளர்கள் உருவாக இந்த முன்முயற்சி ஊக்குவிக்கும்.

ஒவ்வொரு தயாரிப்பாளரும் இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளை படித்து, ஒரு சில திரைக்கதைகளை தேர்ந்தெடுக்காமல், ஒரு வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைகளை மட்டுமே படித்தால், அவர்களின் நேரமும், செலவுகளும் மிச்சமாகும். அதை விட குறைவான நேரத்தில், பல திரைப்படங்களை அவர்களால் உருவாக்க முடியும்.

இந்த நோக்கில் தான் ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி தொடங்கப்படுகிறது. திறமையான திரைக்கதை எழுத்தாளர்களிடமிருந்து கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முழுமையாக உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பிற்கு செல்ல தயாரான நிலையில் உள்ள நேர்த்தியான திரைக்கதைகளை ஸ்கிரிப்டிக் நிபுணர் குழு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.