புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவின் முன்னணி சித்தாந்தவாதிகளில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாயவின் 55 நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாய பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராவார். பாரதிய ஜன சங்கம் பின்னர் பாரதிய ஜனதா கட்சியாக மாற்றப்பட்டது. அதிலிருந்து, 1968-ம் ஆண்டு ரயில் பயணத்தின் போது நடந்து கொள்ளையில் மர்மான முறையில் தீனதயாள் கொலை செய்யப்படுவது வரை பாஜகவின் தலைவராக அவர் இருந்தார்.
தீனதயாளின் “அந்தியோதயா” மற்றும் “ஒருங்கிணைந்த மனிதநேயம்” ஆகிய பார்வைகள் தனது அரசின் நலன்களுக்கு உத்வேகம் அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,”தீனதயாள் உபாத்தியாயாவின் புண்ய திதி நாளில் நான் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். நாட்டின் வளர்ச்சி மற்றும் ஏழைகளுக்கு உதவிய அவரது முயற்சிகளை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அவரது தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்ட நாங்கள், வளர்ச்சியின் பலன்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய 24 மணிநேரமும் உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.