அங்காரா- துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளின் நடுவே அவரது உடல் நேற்றுமீட்கப்பட்டது.
மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.
இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
உலக நாடுகளில் இருந்து குவிந்துள்ள மீட்புக் குழுவினர், ஐந்தாவது நாளாக நேற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்கு மேலானதால், பெரும்பாலான பகுதிகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தான் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நிலநடுக்கத்தின் போது மாயமான இந்தியர் ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உத்தரகண்டின் கோட்வார் பகுதியைச் சேர்ந்த விஜய குமார் கவுட் என்பவர் நில நடுக்கத்தில் சிக்கிக் கொண்டார்.
![]() |
மலாட்யா பகுதியில், இவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலின் இடிபாடுகளை அகற்றும் போது, விஜயகுமாரின் உடல் மீட்கப்பட்டது.
இதை உறுதி செய்த துருக்கி நாட்டு இந்திய துாதரகம், அவரின் உடலை சொந்த ஊரான உத்தரகண்ட் அனுப்பி வைப்பதற்கான பணியை முடுக்கியுள்ளது.
25,000 பேர் பலி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பல இடங்களில் மீட்புப் பணி தொடர்வதால், உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கஹ்ராமன்மாரஸ் பகுதியில் 70 வயது மூதாட்டியும், தெற்கு ஹதாய் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும், 108 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டனர்.இடிபாடுகளின் நடுவே உயிருடன் இருந்தாலும், அங்கு நிலவும் கடும் பனியால், பலர் பலியாகி வருவதாக மீட்புக குழுவினர் தெரிவித்தனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியவர்கள், கடும் குளிரை சமாளிக்க முடியாமல் அவதியடைந்து வருவதால், அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை துருக்கி அரசு துரிதப்படுத்தியுள்ளது.வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், உறையவைக்கும் குளிரை சமாளிக்க சாலைகளில் தீ மூட்டி குளிர்காயும் நிலை துருக்கியில் தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்