நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை: காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

ராஞ்சி: நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.  ஜார்கண்ட் மாநிலம் மக்களிடம் செல்லும் 60 நாள் பிரசார பேரணியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தொடங்கி வைத்தார். சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் பாகூரில் உள்ள குமானி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ பேச்சு சுதந்திரம் இல்லை. பேசத் துணிபவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டு பணவீக்கத்தை தடுக்கும் வாக்குறுதியுடன் பாஜ  ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், வறுமையும் அதிகரித்து வருகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதும், இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியதும் காங்கிரஸ் கட்சிதான். எனவே இந்த 60 நாளும் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று, ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* அதானி சொத்து 2019ல் ரூ.1 லட்சம் கோடி இப்போது ரூ.13 லட்சம் கோடியாக உயர்வு
கார்கே மேலும் பேசியதாவது: பிரதமருக்கு எதிராக நான் எந்தவித தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை. முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு எதிராக என்ன உணர்வுடன் வாஜ்பாய் பேசினாரோ அல்லது மன்மோகன் சிங்கிற்கு எதிராக பா.ஜ என்ன வார்த்தையை பயன்படுத்தியதோ அதையே தான் நான் பயன்படுத்தினேன். பிரதமர் மோடியின் நண்பரான அதானியின் சொத்து மதிப்பு தற்போது 13 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 2019ல் அவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. அதானிக்காக பிரதமர் பணியாற்றுகிறார்.

ஏழைகளுக்காக அல்ல. அதனால் தான் அதானி குழுமத்திற்கு எல்ஐசி ரூ.16,000 கோடியும், எஸ்பிஐ வங்கி ரூ.82,000 கோடியையும் வழங்கியது. இந்த விவகாரத்தை மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பியபோது ​​அதுவும் நீக்கப்பட்டது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ வழக்குகளை எதிர்கொள்ளும் பல எம்எல்ஏக்களை பாஜ கட்சியில் இணைத்து வருகிறது. மோடியும், அமித் ஷாவும் வாஷிங் மெஷினை வாங்கி அதில் எம்எல்ஏக்களின் கறைகளைக் கழுவி சுத்தம் செய்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்ப்பதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்கள்தான் இப்போது ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.