கடந்த திங்கள் கிழமை அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. ஆனாலும், அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. இந்த நிலநடுக்கத்தில் 21,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும், இன்னும் மீட்புப்பணிகள் நிறைவடையவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிரியாவில் கடுமையான குளிர் நிலவிவருகிறது. இது மீட்புப் படையினருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. மீட்புப்பணியின்போது நிகழ்ந்த சில அசாதாரண சூழலை மீட்புப்படையினர் பகிர்ந்துவருகின்றனர். அதில், தெற்கு ஹடாய் மாகாணத்தில் உள்ள ஒரு சிதிலமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் பிறந்து 10 நாள்களே ஆன யாகிஸ் என்ற ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Yağız Ulaş bebek sadece 10 günlük. Depremden 90 saat sonra Hatay Samandağ’da annesi ile birlikte enkazdan çıkarıldı. pic.twitter.com/7jjjEXQfiV
— Ekrem İmamoğlu (@ekrem_imamoglu) February 9, 2023
கிட்டத்தட்ட 90 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தையும், தாயும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரின் உடல்நிலை தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் உலகம் முழுவதுமுள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.