* பொதுமக்கள், வணிகர்கள் எதிர்பார்ப்பு
* ஒன்றிய அரசு முழு நிதி ஒதுக்கவும் கோிரிக்கை
பழநி: நூறு ஆண்டு கால கனவுத்திட்டமான பழநி- ஈரோடு அகல ரயில் பாதை திட்டத்திற்கான அறிவிப்பை செயல்படுத்த ஒன்றிய அரசு முழுமையான நிதிகளை ஒதுக்க முன்வர வேண்டுமென பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகால கனவு திட்டம் பழநி- ஈரோடு அகல ரயில் பாதை திட்டம். 1915ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் பகுதியில் அதிகளவு நெல், பருத்தி மற்றும் மானாவரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இவைகளை விற்பனை செய்வதற்கு வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல இதுநாள் வரை லாரி போன்றவைகளே அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் போக்குவரத்து செலவு கட்டுப்படியாகாததால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறைந்த விலைக்கு இங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுபோல் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அநேக பகுதிகளில் விசைத்தறி தொழில் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், பெட்ஷீட், மஞ்சள், ஜமுக்காளம் போன்றவை அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதுபோல் பழநி நகருக்கு வடமாநிலங்களுக்கான இணைப்பு ரயில்கள் இல்லாததால் தற்போது வடமாநில பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
எனவே, ஆங்கிலேயர் காலத்தில் உண்டாக்கப்பட்ட பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக கடந்த 2004ம் ஆண்டு இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து முதல்கட்ட சர்வே பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 2006, 2008ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த சர்வே பணி நடத்தப்பட்டு ரூ.380 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2010, 2011, 2012 ஆண்டுகளில் ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு முறையே ரூ.40 கோடி, ரூ.33 கோடி, ரூ.12 கோடி என ரூ.85 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தபின் இத்திட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பழநியில் இருந்து தாசநாயக்கன்பட்டி, தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கேயம், சென்னிமலை, ஈங்கூர் வழியாக 91.5 கிலோ மீட்டர் தொலைவில் ஈரோட்டிற்கு ரயில் தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 6 பெரிய பாலம், 42 சிறிய பாலம், 23 ரயில்வே கேட் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி மூலமாக ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தினர். இதன் பயனாக இத்திட்டத்திற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அறிவிப்புடன் இத்திட்டத்தை நிறுத்தி விடாமல் பூர்வாங்க பணிகளை துவங்க வேண்டுமென பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநி ரயில் பயன்படுத்துவோர் சங்க தலைவர் முருகானந்தம் கூறியதாவது, பழநி- ஈரோடு அகல ரயில் பாதை திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் மெத்தனம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. ஒன்றிய அரசு அறிவிப்புடன் நிறுத்தி விடாமல் இத்திட்டத்திற்கான நிதிகளை முழுமையாக ஒதுக்கி பணிகளை விரைவில் துவங்க வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு என 3 மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவர். இவ்வாறு கூறினார்.