பீகார் இளைஞருக்கு வேலை ரூ.300 மிச்சம்ன்னு நினைச்சார் இப்ப ஒரு உயிர் போச்சே… பருப்பு மில் காவலாளி கொலை..!

சேலம் பள்ளப்பட்டி பருப்பு மில்லில் 300 ரூபாய் குறைவாக கூலி கேட்ட பீகார் இளைஞர் ஒருவர் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாட்களில் கல்லா பெட்டியில் கைவைத்த நிலையில், தடுத்த காவலாளியை கொலை செய்த விபரீதம் அரங்கேறி உள்ளது..

சேலம் பள்ளப்பட்டி அடுத்த மணிபுரம் மாருதி பருப்பு மில்லில் பணிபுரிந்த அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த காவலாளி தங்கையன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதிய போலீசார், அவரது சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலத்தை உடற்கூறு செய்த மருத்துவர்கள் காவலாளி தங்கையன் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கொலையாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம ஆசாமி ஒருவன் சுவர் ஏறிக்குதிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

பருப்பு மில் உரிமையாளர் மாரி என்பவரிடம் விசாரித்தனர். இரு தினங்களுக்கு முன்பாக பீகாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வேலை கேட்டு வந்ததாகவும், மூட்டைகளை ஏற்றி இறக்க வழக்கமாக உள்ளூர் ஆட்கள் 800 ரூபாய் கூலி வாங்கும் நிலையில் அவர்கள் 500 ரூபாய் போதும் என்றதால் 300 ரூபாய் மிச்சமாகும் என்ற நினைப்பில் அதில் ஒருவனிடம் செல்போன் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டு குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தியதாக தெரிவித்தார்.

சம்பவத்தன்று அந்த பீகார் இளைஞர் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்ததால், அந்த இளைஞரின் செல்போன் சிக்னலை வைத்து அவர் சூரமங்கலம் ரயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் விரைந்து சென்று அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ஜித் குமார் என்கிற சோனகுமார் என்ற அந்த இளைஞர் சம்பவத்தன்று சுவர் ஏறிக்குதித்து மில்லுக்குள் நுழைந்து மில்லின் கல்லாப்பெட்டியில் இருந்த ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை தான் திருடியதாகவும், சத்தம் கேட்டு அங்கு வந்த காவலாளி தங்கையன் தடுத்ததால் அவரை தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாகவும், அதில் அவர் பலியானதாக சோனகுமார் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவலாளி கொலை வழக்கில் அந்த பீகார் இளைஞரை கைது செய்தனர்.

உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாற்றாக குறைந்த சம்பளத்துக்காக வட மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவோர் குறைந்த பட்சம் அந்த நபர்களின் குற்றப்பின்னணியை விசாரிக்கத் தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.