மதுரை: புகையிலை, பிராந்தி பதுக்கிய வழக்குகளில் ஜாமீன் வழங்கிய நீதிபதி, ரூ.1.85 லட்சத்தை பல்வேறு பள்ளிகள் மற்றும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் குறிச்சியைச் சேர்ந்த குலஞ்சிராஜன். இவரை 21 பிராந்தி பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக பந்தநல்லூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கிய நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, மனுதாரர் ரூ.30 ஆயிரத்தை மதுரை சுந்தர்ராஜன்பட்டியிலுள்ள இந்திய பார்வையற்றோர் சங்க பள்ளிக்கு செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தாமரைபாக்கத்தைச் சேர்ந்தவர் மதியழகன். ரூ.5.65 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கி வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துறை போலீசால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கிய நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா, ரு.50 ஆயிரத்தை சிவகங்கை மாவட்டம் சண்முகநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், வடக்குவாசலைச் சேர்ந்த மாரிமுத்து பிராந்தி பாட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
இவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, ரூ.30 ஆயிரத்தை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பீமராஜன் மற்றும் நெல்லை பாப்பாகுடியைச் சேர்ந்த ராஜபெருமாள் ஆகியோர் ரூ.1.63 லட்சம் மதிப்புள்ள புகையிலையை பதுக்கியதாக நெல்லை சந்திப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, பீமராஜன் ரூ.50 ஆயிரமும், ராஜபெருமாள் ரூ.25 ஆயிரமும் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.