மரபணு மாற்றப்பட்ட கடுகை வயல்வெளி சோதனைக்கு சமீபத்தில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இவ்வகை கடுகால் உணவு இறையாண்மை பாதிக்கப்படும் என்றும், விதைகளின் உரிமம் கார்ப்பரேட் கைகளில் சிக்கிக்கொள்வதால் பேரிழப்பு ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் வலுவாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மரபு விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தேசிய பாதுகாப்பான உணவு தினமான (பிப்ரவரி 9 ) நேற்று, பாதுகாப்பிற்கான உணவுக்கான கூட்டமைப்பு (safe food alliance) “மரபணு மாற்றில்லா விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுக்கான திருவிழாவை” ஒருங்கிணைத்தது.
இந்நிகழ்வு சென்னை, தி.நகர், தக்கர் பாபா வித்யாலயாவில் நடைபெற்றது. பாரம்பரிய உணவு வகைகள், விதை, பருத்தி ஆடை அங்காடிகள் என பாரம்பர்யத்தை போற்றும் விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. சுற்றுச்சூழல் சம்மந்தமான புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டன.
மரபு விதைகள் பரிமாற்றமும் இந்நிகழ்வில் இருந்தது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள்காட்டி நடிகர் கார்த்தி புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது. பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பிலிருந்து வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் பேசுகையில், “மரபணு மாற்றப்பட்ட விதைக்கும், ஹைபிரிட் விதைக்கும் வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு மரபும் ஒரு என்சைம் வெளியிடும். ஆனால் மரபணு மாற்று விதைகள் மக்களுக்கு அலர்ஜி உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களையும் பாதிக்கப்படும்.
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை அறிமுகப்படுத்தும் போது பருத்தி சாப்பிடக்கூடிய பொருள் அல்ல. அதனால் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால் எந்த பாதிப்பும் மக்களுக்கு இல்லை என்று சொல்லப்பட்டது. தமிழகத்தில் பருத்திப்பால் குடிப்பவர்களும், பருத்தி அல்வா செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பாதிப்பு ஏற்படுமல்லவா! தமிழகத்தில் மட்டுமே 72 வகை கத்திரிக்காய்கள் இருக்கின்றன. ஆனால் பி.டி கத்தரிக்காயை மத்திய அரசு அறிமுகப்படுத்த முயற்சி எடுத்தது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு திரும்ப பெறப்பட்டது. தற்போது மரபணு மாற்றப்பட்ட கடுகை திணிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. இந்த வகை கடுகில் பார்னேஸ் பார்ஸ்டார் தொழில்நுட்பம் விதைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது” என்று பேசினார்.
பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் பேசுகையில், “உச்சநீதிமன்றம் மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் தான் கடுகு சந்தைக்கு வரவில்லை. மரபணு மாற்றப்பட்ட கடுகு மேற்கொண்ட ஆய்வு போதுமானதல்ல. இந்த கடுகால் தேனீக்களுக்கு, வண்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து இந்தியாவில் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. உயிரியல் பன்முகத்தன்மை தான் இயற்கையின் அடித்தளம். வேறொரு நிலப்பரப்பில் விளைவித்த உணவுகளை காட்டிலும் நம் நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு உணவு உண்ணுவதே ஆரோக்கியம். இதுவே உயிரியல் பன்முகத்தன்மை.
மரபணு மாற்றப்பட்ட விதைகளால் உயிரியல் பன்முகத்தன்மை பாதிக்கப்படும். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான காப்புரிமை கார்ப்பரேட் கைகளில் சிக்கிக்கொள்ளும். காப்புரிமை பெற்றுவிட்டால் மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதையும் கார்ப்பரேட் முடிவு செய்யும். மரபணு மாற்றப்பட்ட கடுகை சந்தைகளில் அனுமதித்தோம் என்றால் எதிர்காலத்தில் சந்தையில் விற்கும் அனைத்து பொருட்களும் மரபணு மாற்றப்பட்ட பொருட்களாகும் பேராபத்து உள்ளது” என்றார்.
முன்னாள் ஐஏஸ் அதிகாரி சாந்தா ஷீலா பேசுகையில், “என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் மரபணு மாற்றப்பட்ட கடுகு மிகவும் ஆபத்தான ஒன்று. இன்று இட்லி தோசை கடைகளை காட்டிலும் பிரியாணி கடைகள் அதிகமாகிவிட்டன. நம்முடைய உணவு பழக்கவழக்கங்கள் நீரிழிவு நோயின் தலைநகரமாக நம் வாழும் இடத்தை மாற்றிவிட்டது.
கிராமத்தில் உள்ளவர்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு மரபணு மாற்றப்பட்ட கடுகு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் மக்களுக்கு மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும். சாப்பிடும் உணவில் உள்ள ஆபத்தை நுகர்வோர்கள் உணர வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக நுகர்வோர்கள் அணி திரள வேண்டும்” என்றார்.