மதுரை: குமரி மாவட்டம் மாதவலாயத்தைச் சேர்ந்த சையத் அலி பாத்திமா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது வீட்டின் அருகே நூரில் ஆலம்என்பவர் சுகாதாரமற்ற நிலையில் மாட்டிறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இந்தக்கடை உரிய அனுமதி பெறாமல் நடத்தப்படுகிறது. இறைச்சிக் கழிவுகள் அங்கேயே கொட்டப்படுவதால் நோய் பரவுகிறது. இதனால் மாட்டிறைச்சி கடையை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: உள்ளாட்சி அமைப்பிடம் உரிமம் பெறாமல் எந்த இடத்திலும், யாருக்கும் ஆடு, மாடுகளை வெட்ட அனுமதிக்கக் கூடாது. கோயில் திருவிழாக்கள் மற்றும்ஊராட்சி அனுமதி வழங்கும் பொதுஇறைச்சிக் கூடம் தவிர்த்து, வேறு இடங்களில் இறைச்சிக் கடை நடத்துவது குற்றமாகும்.
3 வாரங்களுக்குள் நடவடிக்கை: இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பிடம் கோழிக்கடைக்கு அனுமதி பெற்று, மாடு, ஆடு இறைச்சிக் கடைகளை நடத்தி வருவதாக எதிர்மனுதாரர் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, உரிமம் பெறாமல் மாட்டிறைச்சிக் கடை நடத்துவது தொடர்பாக தோவாளை ஊராட்சிஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.