முதல் மலையாள நடிகை பி.கே.ரோஸியை கவுரவித்த கூகுள்

கூகுள் நிறுவனத்தின் முகப்பு பக்கம் உலக புகழ்பெற்றது. அந்த பக்கத்தில் இடம்பெறும் டூடுல் மிகவும் கவனிக்கப்படும். உலகில் பல்வேறு துறையில் சிறந்தவர்களை இந்த டூடுல் மூலம் கூகுள் கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று மலையாள சினிமாவின் முதல் நாயகியான பி.கே.ரோஸியின் படத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது. ரோஸியின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த டூடுலை வெளியிட்டுள்ளது.

யார் இந்த ரோஸி?
இந்தியாவுக்குள் சினிமா வருவதற்கு முன்பு நாடகங்கள்தான் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. பெண்கள் நடிக்க மாட்டார்கள். நடிக்க அனுமதியும் இல்லை. ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்தார்கள். சினிமா அறிமுகமானபோதும் இதே நிலைதான் இருந்தது. மலையாள சினிமாவின் முதல் இயக்குனரான ஜே.சி.டேனியல் மலையாளத்தின் முதல் படமான 'விகதகுமாரன்' என்ற படத்தை இயக்கினார். இது மவுனப்படம். 1930ம் ஆண்டு வெளிவந்தது.

இந்த படம் ஒரு நாயர் குடும்பத்து பெண்ணை மையாக கொண்டது. அந்த பெண்ணாக நடித்தவர் பி.கே.ரோஸி. 'காக்கராஷி' என்ற தமிழ் நாடகத்தில் நடித்து வந்த ரோஸியை ஜே.சி.டேனியல் கண்டுபிடித்து இதில் நடிக்க வைத்தார்.

ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ரோஸி நாயர் பெண்ணாக நடிப்பதா என்று பெரும் சர்ச்சை எழுந்தது. படத்தை வெளியிடவிடாமல் தடுத்தார்கள். படம் பார்க்க வந்தவர்களை அடித்து விரட்டினார்கள். எதிர்ப்புகளை மீறி முதல் நடிகையாக மலையாள சினிமாவில் கால்பதித்தவர் ரோஸி.

அதன்பிறகு சில படங்களில் நடித்தவர் புதிய நாயகிகள் புறப்பட்டு வரவும் சினிமாவை விட்டு விலகினார். கேசவ பிள்ளை என்ற லாரி டிரைவரை மணந்து கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் வறுமையுடன் வாழ்ந்து 1988ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது நினைவாக கேரள பெண் திரைப்பட கலைஞர்கள் பி.கே.ரோஸி கேசவப்பிள்ளை பிலிம் சொசைட்டி என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.