அடடே… சிபிஆருக்கு ஏன் ஆளுநர் பதவின்னு புரியுது… கெத்து காட்டியிருக்காரு..!

சிபிஆர் என்று அழைக்கப்படும் பாஜக மூத்த தலைவரும், கோவை முன்னாள் எம்.பி.யுமான சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ் மகாராஷ்டிர ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆளுநராக பதவி பெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை டிவிட்டரில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் உறுதியான தொண்டரான அவர், தனது சித்தாந்தத்தை அணிகலனாகக் கொண்டு, தனது அனைத்துப் பொறுப்புகளிலும் தனி முத்திரை பதித்திருந்தார் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 இல் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 ல் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், 2014 பொதுத் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக ஆதரவின்றி 3,89,000 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதேபோல, 2019 மக்களவைத் தேர்தலில் 3,92,007 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1957-ம் ஆண்டு மே 4-ம் தேதி பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தனது 14வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுடன் தொடர்பில் இருந்து வருகிறார். மேலும், இந்திய அரசின் MSME துறையின் கீழ் வரும் அகில இந்திய தென்னை நார் வாரியத்தின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.