சண்டிகர்: அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஆடை கட்டுப்பாட்டில் புதிய விதிமுறை வகுக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, குட்டை பாவாடை, ஜீன்ஸ், டிசர்ட், டெனிம் ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட உள்ளது. அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரியானா மாநிலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய ஆடைக் கட்டுப்பாடு விதிமுறை கொண்டு வரப்பட உள்ளது. இது தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. மருத்துவமனைகளில் எந்த ஷிப்டிலும், வார விடுமுறை நாட்களிலும் 24 மணி நேரமும் இந்த ஆடை கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
இதன்படி, வேலை நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் யாரும் ஜீன்ஸ், குட்டை பாவாடை, டெனிம் ஆடைகள், டிசர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. அதிக நகைகள், ஆபரணங்கள் அணியக் கூடாது. மேக்கப் போட்டு வருவதல், ஏடாகூடமான சிகை அலங்காரத்துடன் வருதல், நீண்ட நகம் வைத்திருத்தல் கூடாது. ஷார்ட்ஸ், பலாஸ்ஸோக்களும் அணிந்து வரக்கூடாது. இதை மீறினால் சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு அன்றைய தினம் பணிக்கு வரவில்லை என ஆப்சென்ட் போடப்படும்.
மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவம் சாராத நிர்வாக பணியாளர்கள் அவரவர்களுக்கான சீருடை மற்றும் பெயர் பேட்ஜ் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தொழில்முறை தோற்றத்தை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். தனியார் மருத்துவமனைகளில் எந்த ஒரு ஊழியரும் சீருடை இன்றி இருப்பதில்லை. ஆனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளி யார் ஊழியர் யார் என்பதை கண்டறிவதில் குழப்பம் இருக்கிறது. இதை தவிர்க்க இந்த ஆடை கட்டுப்பாடு உதவும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.