சென்னை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் வாசன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை: “ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், நான் பெரிதும் போற்றும் அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு ஆளுநராக தனது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பாஜகவின் உறுதியான தொண்டரான அவர், தனது சித்தாந்தத்தை அணிகலனாகக் கொண்டு, தனது அனைத்துப் பொறுப்புகளிலும் தனி முத்திரை பதித்திருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: “எனது அருமை நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கிறது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்படவும், அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்: “தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன்: “தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பெருமைக்குரியவர். மக்கள் நலன், மாநில நலன், தேசிய நலன் மிக்க சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதால் தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்கிறது” என்று கூறிள்ளார்.