ஈரோடு கிழக்கில் குடல் குழம்பு, மட்டன் பிரியாணி; உல்டா அரசியலுக்கு ஆளுக்கு ரூ.1,000!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இடையிலான பிரதான போட்டியில் 50:50 வெற்றி வாய்ப்பே காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிக்கு சாதகமான நிலை தான் காணப்படும். ஆனால் ஈரோடு கிழக்கில் நிலைமை சற்று சீரியசாக மாறியிருக்கிறதாம். இதன் காரணமாக புதிய வியூகங்களை வகுத்து
திமுக
களம் கண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவிற்கு எதிராக வியூகம்

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் மட்டுமின்றி திரளான பொதுமக்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதிமுகவின் கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று ஆளுங்கட்சி தரப்பு பணத்தை வாரி இறைப்பதாக சவுக்கு சங்கர் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

வரலாறு காணாத நிகழ்வு

வாக்கு வங்கி அரசியலில் கூட்டம் சேர்க்கவும், தங்களுக்கு சாதகமாக ஓட்டு போடவும் தான் பணம் கொடுத்து பார்த்திருப்பீர்கள். எதிர் தரப்பு கூட்டத்திற்கு செல்லக் கூடாது எனக் கூறி பணம் கொடுக்கும் நிகழ்வுகளை இந்த இடைத்தேர்தலில் பார்க்க முடிந்ததாக தெரிவித்தார். திமுக தரப்பில் பெரிய அளவில் டெண்ட் போட்டு மக்கள் திரளை கவர்ந்திழுந்து வைத்துள்ளனர். அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்து விடுகின்றனர்.

ருசியான விருந்து

அனைவரும் காலை முதல் மாலை வரை அங்கேயே டேரா போட்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான் ஒரே வேலை. அதுமட்டுமின்றி காலை உணவாக குடல் குழம்பு, மதியம் மட்டன் பிரியாணி போடுவதாக ருசியான தகவலும் கிடைத்துள்ளது. மாலை அனுப்பி விடுவதால் இரவு உணவு கிடையாது. அதுமட்டுமின்றி ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் ரொக்கம் தருகிறார்களாம்.

ரூ.1,000 விநியோகம்

அதாவது, சும்மா இருக்க பணம் கொடுப்பது தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என சமயம் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது ஆளும் கூட்டணி தரப்பில் ஏதோ ஒரு அச்சம் உலவி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கள நிலவரம் தொடர்பான தகவல் முதல்வர்
மு.க.ஸ்டாலின்
காதுகளுக்கு சென்றுள்ளது.

இஸ்லாமியர்கள் வாக்குகள்

இதன் தொடர்ச்சியாகவே நேரடி பிரச்சாரம் செய்ய கடைசி வாரத்தில் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் இருக்கின்றன. இத்தகைய சூழலில் அதிமுகவிற்கு ஆதரவாக பாஜக களமிறங்குவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

புதுசா வந்த சிக்கல்

ஏனெனில் சிறுபான்மையினரின் வாக்குகள் பாஜகவிற்கு விழுவது சாத்தியமில்லை என்றே தேர்தல் அரசியல் உணர்த்தும் பாடமாக இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டும் 41 ஆயிரம் இருக்கின்றன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. இவ்வாறு ஒருபுறம் அதிமுகவிற்கு சாதகமான அம்சமும், மறுபுறம் சிக்கலான நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.