ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம்: ஐஎன்டியுசி அறிவிப்பு

சென்னை: இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்(ஐஎன்டியுசி) தமிழ்நாடு கிளையின் சென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர கே.நாகராஜ்  தலைமை தாங்கினார். செகரட்டரி ஜெனரல் எம்.பன்னீர்செல்வம், ராயபுரம் பி.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், போக்குவரத்து பேரவை தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்பி,  ஐ.என்.ஆர்.எல்.எப்  பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம கர்ணன், கைத்தறி நெசவாளர் பிரிவு பொதுச்செயலாளர் ஆர்.தாமோதரன், ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் இளவரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வருகிற 22 மற்றும் 23ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் ஐ.என்.டி.யு.சி தேசிய தலைவர் தேர்தல் நடைப்பெறுகிறது. சென்னை மாவட்டத்தின் சார்பில் அனைத்து பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொள்வது, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அமோகமாக வெற்றி பெற தமிழக ஐ.என்.டி.யு.சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது. சென்னையிலுள்ள மத்திய, மாநில தனியார் தொழிற்சாலைகளில் ஐ.என்.டி.யு.சிக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது. 2016லிருந்து போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துநர், உள்ளிட்ட பணிகள் காலியாகவுள்ளது. இப்பணி இடத்திற்கு பணியாளர்களை உடனே தமிழக அரசு நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.