‘ஓம் என்பதும் அல்லா அல்லா என்பதும் ஒன்றே’ – இஸ்லாமிய தலைவர் பேச்சு.!

தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலமா-இ-ஹிந்தின் 34வது மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம், மத சுதந்திரம் மற்றும் முஸ்லீம் தனிநபர் சட்டம் மற்றும் மதரஸாக்களின் சுயாட்சி ஆகியவை விவாதிக்கப்படுகின்றன. ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்பது ஒரு நூற்றாண்டு பழமையான அமைப்பாகும், மேலும் முஸ்லிம்களின் சிவில், மத, கலாச்சார மற்றும் கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த அமைப்பு செயல்படுகிறது.

இந்தநிலையில் நேற்றைய மாநாட்டில் ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மஹ்மூத் மதானி பேசும்போது, ‘‘இந்தியா நமது நாடு. இந்த நாடு நரேந்திர மோடி மற்றும் மோகன் பகவத் ஆகியோருக்குச் சொந்தமானது போலவே இந்த நாடு மஹ்மூத் மதனிக்கு சொந்தமானது. யாரும் யாரைவிட உயர்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை.

இந்நாட்டின் பழமையான மதம் இஸ்லாம். இந்த நிலம் முஸ்லீம்களின் முதல் தாயகம். இஸ்லாம் வெளியில் இருந்து வந்த மதம் என்று சொல்வது முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படையற்றது. அனைத்து மதங்களிலும் இஸ்லாம் மிகவும் பழமையான மதம். இந்தி முஸ்லிம்களுக்கு இந்தியா சிறந்த நாடு. நாங்கள் கட்டாய மத மாற்றங்களுக்கு எதிரானவர்கள். ஆனால் இன்று தானாக முன்வந்து மதம் மாறுபவர்களும், பொய் வழக்குகளில் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்’’ என்று பேசினார்.

இந்தநிலையில் கடைசி நாளான இன்றைய மாநாட்டில், இஸ்லாமிய அமைப்பின் மற்றொரு தலைவர் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அமைப்பின் தலைவர் சையது அர்ஷாத் மதானி பேசும்போது, ‘‘ நான் சில தர்ம குருக்களிடம் கேட்டேன் ஸ்ரீராமனோ, பிரம்மாவோ, சிவனோ யாருமே இல்லாத போது, மனு யாரை வழிபட்டார்?. சிலர் ‘ஓம்’ வழிபாடு செய்ததாகச் சொன்னார்கள். ‘ஓம்’ என்பதைத்தான் அல்லாஹ் என்றும், பார்சி பேசுபவர்கள் ‘குதா’ என்றும், ஆங்கிலம் பேசுபவர்கள் ‘கடவுள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது ஓம் அல்லது அல்லாஹ் ஒன்றே ஒன்றுதான், இரண்டும் ஒன்றே தான். அதைத்தான் மனு வணங்கி வந்தார். சிவன் இல்லை, பிரம்மா இல்லை, ஆனால் ஓம் மற்றும் அல்லாவை மட்டுமே வணங்கினர். சுமார் 1400 வருடங்களாக இந்துக்களும் முஸ்லிம்களும் நாட்டில் சகோதரர்களைப் போல் வாழ்ந்து வருகிறோம், நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இஸ்லாமுக்கு மாற்றியதில்லை.

பாஜக ஆட்சியில் தான் 20 கோடி முஸ்லிம்கள் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கேள்விப்பட்டோம். அவர்களை வீட்டுக்கு அனுப்புவதன் மூலம், அவர்களை இந்துக்களாக மாற்றுகிறார்கள். இவர்களுக்கு இந்தியாவின் வரலாறு பற்றி எதுவும் தெரியாது’’ என்று பேசினார். இஸ்லாமிய அமைப்பின் தலைவரின் இந்த பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநாட்டில் கலந்து கொண்ட மற்ற மத தலைவர்கள் கோபமடைந்து மாநாட்டை புறக்கணித்தனர்.

மேடையில் இருந்த ஜெயின் முனி, ஆச்சார்யா லோகேஷ் முனி ஆகியோர் மதானியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து, “நாங்கள் இணக்கமாக வாழ்வதில் மட்டுமே உடன்படுகிறோம், ஆனால் ஓம், அல்லாஹ், மனு பற்றிய அனைத்து கதைகளும் குப்பை. அவர் சொன்ன கதைகள், அதை விட பெரிய கதைகளை கூட என்னால் சொல்ல முடியும். என்னுடன் விவாதத்திற்கு வருமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்.

முதல் ஜைன தீர்த்தங்கரர் ரிஷபர் என்பதையும், அவரது மகன்கள் பரதன் மற்றும் பாகுபலி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பரதன் நினைவாகத் தான் இந்தியா அபாரதம் என அழைக்கப்படுகிறது என்பதை உங்களால் அழிக்க முடியாது’’ என்று அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.