கர்நாடகாவில், இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே ஆட்சிக்கட்டிலை தன்வசம் வைத்திருக்கும் பா.ஜ.க, அதிதீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.
இதுவரை, மூன்று முறை பிரதமர் நரேந்திர மோடி, ஒரு முறை பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வந்து சென்ற நிலையில், நான்காவது முறையாக நேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா கடலோர கர்நாடக பகுதியான தக்ஷிண கன்னடா மாவட்ட பகுதிகளுக்கு வந்தார். அங்குள்ள துளு மக்களின் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு, அவர்களை பார்வையிட்டதுடன், புதிய கோயில், பல்வேறு நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார்.

வாக்குச் சேகரிப்பதற்காக ‘ரோடு ஷோ’ வந்த அமித் ஷா தொண்டர்களிடம், ‘‘காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியினர், கர்நாடகத்தில் இதுவரை எந்த வளர்ச்சியையும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகத்தில் ஊழல் செய்து, இந்த மாநிலத்தை காந்தி குடும்பத்தின் ATM ஆகத்தான் பயன்படுத்தி வந்தனர்.
18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் மீது நம்பிக்கை வைத்திருக்கும் காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியினர் வேண்டுமா? அல்லது, 16-ம் நூற்றாண்டில் இங்கு வளமான ஆட்சியை நடத்திய துளுவ ராணி அபக்கா செளதா மீது நம்பிக்கை வைத்திருக்கும் பா.ஜ.க வேண்டுமா? நீங்களே (மக்கள்) முடிவு செய்யுங்கள். வரும் தேர்தலில், காங்கிரஸ், ஜனதா தளத்துக்கு வாக்களிப்பது கர்நாடக மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

கர்நாடகத்தில் அடுத்த ஆட்சி யார் அமைக்க வேண்டும்? பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கிய நரேந்திர மோடி தலைமையிலான, தேசபக்தர்களின் அணியான பா.ஜ.க-வா… அல்லது, ஊழல் காங்கிரஸ் கட்சியா… என்பதை நீங்களே (மக்கள்) முடிவு செய்யுங்கள்’’ எனப் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், ‘‘சமீபத்தில் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படத்தைப் பார்த்தேன். படத்தை பார்த்தபின் இங்குள்ள (துளு மொழி மக்கள்) மக்களின் உயரிய, பிரசித்திப் பெற்ற பாரம்பர்யத்தை தெரிந்துகொண்டேன்’’ என துளு மொழி மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘காந்தாரா’ படம் குறித்தும் அமித் ஷா பேசினார்.
‘‘துளு மொழி பேசும் கடலோர கர்நாடகா மக்களை கவர்வதற்காகவும், இங்கு அதிக இந்து அமைப்புகள் இருப்பதாலும், ‘பாதுகாப்பான இந்தியா, தேசபக்தர்கள்’, துளுவ ராணி அபக்கா செளதா, காந்தாரா படம் குறித்தெல்லாம் அமித் ஷா பேசியிருக்கிறார்” என அமித் ஷாவை, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.