கறுப்பின மக்களின் விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர் ; ஆப்ரகாம் லிங்கன்!

Abraham Lincoln 214th Birth Anniversary: ஒழுக்கமுடமை எனும் அதிகாரத்தை உருவாக்கிய வள்ளுவப் பெருந்தகை, அதில் பல ஒழுக்க நெறிகளை மிக விரிவாகவும் விளக்கமாகவும் விவரித்துள்ளார். “ஒழுக்கம் உயர்வைத் தரும்” என்பதற்கேற்ப, ஒழுக்கத்தின் மூலம் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர்தான் ; முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். அவருக்கு இன்று 214வது பிறந்த நாளாகும். இந்நன்னாளில் அவரை நினைவுகூர்வது காலத்தின் கட்டாயமாகும்.

ஏனெனில், எவ்வித பின்புலமும் இல்லாமல் அமெரிக்க நாட்டின் உச்சபட்சமாக கருதப்படும் அதிபர் பதவியை அவர் அடைந்ததற்கு, ஒழுக்கமே முன்நின்றது ; இது வரலாறு. “கறுப்பின மக்களின் விடிவெள்ளி” என்று போற்றப்பட்ட ஆப்ரகாம் லிங்கன், “பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்” என்றார். 

அவர் சிறு வயதிலேயே நூல்கள் படிப்பதில் அதிகபட்ச ஆர்வம் கொண்டிருந்தார்.  அவர் படித்து கற்றுத்தேர்ந்த நூலறிவானது ; அவரை பக்குவப்படுத்தியது. குழந்தை பருவத்திலேயே தாயை இழந்த லிங்கனுக்கு உற்ற நண்பனாக விளங்கியது, நூல்கள்தான். எங்கெல்லாம் பயனுள்ள நன்னூல் கிடைக்கிறதோ ; அங்கெல்லாம் உடனே பயணித்துவிடுவார். 

மேலும் ஏழை குடும்பத்தில் பிறந்த அவர், வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த காலம் என்பதால், விலைக்கு வாங்கி நூல்களைப் படித்ததைவிட ; இரவலாக வாங்கிப் படித்ததே  அதிகம். அதற்காக சுமார் 40லிருந்து 50கிமீவரை கால்நடையாக சென்று வருவது வழக்கம்.  அந்தளவிற்கு  அறிவுப் பசியானது ; அவரை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது. அவரது ஆயுள் உள்ளவரை அது அடங்கவில்லை என்பதே முற்றிலும் உண்மை.

ஐக்கிய அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தைச் சார்ந்த ஹாட்ஜன்வில் பகுதியில் 1809ஆம் ஆண்டு ஒரு சிறிய மர வீட்டில் ஆப்ரகாம் லிங்கன் பிறந்தார். செவ்விந்தியர்களால் படுகொலை செய்யப்பட்ட இவருடைய தாத்தாவின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரைச் சூட்டினார், அவரது தந்தை தாமஸ் லிங்கன்.  நான்கு வயதைக் கடக்கும் முன்பே அவருக்கு இருந்த ஆர்வமிகுதியால் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். இது அவரது குடும்பத்தினரை ஆச்சரியத்துள்ளாக்கியது! 

ஏனெனில், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  அதுவும் லிங்கன் வசித்துவந்த கென்டகி மாநிலம் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களைவிட கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தது.

வயதுக்கு மீறிய உயரமும் வலிமையும் கொண்டிருந்த ஆப்ரகாம், ஏழு வயதிலேயே துப்பாக்கிச் சூடுவதில் நன்கு தேர்ச்சிப் பெற்றிருந்தார். கோடரியைப் பிடித்து மரம் வெட்டுவதிலும் கைத்தேர்ந்தவரானார். சிறுவயதில் கூலி வேலை செய்துகொண்டே பள்ளி படிப்பை தொடர்ந்தார்
 
16வயது இருக்கும்போது, நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதன்பின் தான் வழக்கறிஞராக வேண்டும் என்கிற எண்ணம் அவரது ஆழ்மனதில் ஊடுருவியது. 21வயதுவரை அவரது தகப்பனாருடன் வசித்துவந்த அவர், அதன்பிறகு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசிக்க தொடங்கினார்.

அதிக வருமானத்தை ஈட்டும் எண்ணத்தில் வேலைத் தேட தொடங்கினார். அது தொடர்பாக ‘நியூ ஆர்லியன்ஸ்’ என்ற நகருக்குச் செல்ல நேரிட்டது. ஆனால், அங்கு அவர் எதிர்பார்க்காத வகையில் கொடுமையான காட்சிகளைக் காண நேரிட்டது. குறிப்பாக அந்நகரில் உள்ள அடிமைச் சந்தையில், அடிமைகள் விற்கப்படுவதைக் கண்டார். அதனைக்கண்டு மனம் குமுறினார். அக்காட்சிகள் அவரது உடலின் சூட்டை அதிகபடுத்தின. ; நரம்புகளெல்லாம் முறுக்கேறத் தொடங்கின ; குருதிகளின் ஓட்டம் அதிவேகமெடுத்தன ; ஒருகணம் அவர் தன்னிலையை மறந்தார். 

ஏனெனில், அதுவரை அடிமை வியாபாரத்தை அவர் நேரில் கண்டதில்லை. நாம் காய்கறிகள் பழங்கள் வாங்கும்போது எப்படி ஆய்வுசெய்து வாங்குவோமா அதுபோல கறுப்பின மக்களைத் தட்டிப் பார்த்து, தடவிப் பார்த்து விலைக்கு வாங்கும் நிலை அங்கு நிலவியது. ஒரு கறுப்பின பெண்ணை வாங்க வந்த வெள்ளையன் அவளின் அங்கங்களில் ஆங்காங்கே கைவைத்தும் ; தடவிப் பார்த்தும் ; அமுக்கிப் பார்த்தும் விலைக்கு வாங்கினான். அவ்வடிமை சந்தையில் கறுப்பின மக்கள்படும் சொல்லொணா துயரங்களைக்கண்டு துடிதுடித்துப் போனார் ; பேரதிர்ச்சிக்குள்ளானார்,  அவ்வதிர்ச்சியில் ஆப்ரகாம் லிங்கனின் இதயத்துடிப்பானது ; ஒருகணம் இயங்க  மறுதலித்து ; மீண்டும் இயங்கத் தொடங்கின. 
“இந்த அடிமை முறையை மட்டும் ஒழிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் ஒழிப்பேன்” என்று அவ்விடத்திலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

1834ஆம் ஆண்டு  மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினரானார் லிங்கன். 
1836, 1838, 1840ஆம் ஆண்டு எனத் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 27 வயதில் வழக்கறிஞரானார். வழக்கறிஞர் தொழிலை அவர் பணம் ஈட்டுவதற்காக செய்யவில்லை ; மன திருப்திக்காக மட்டுமே செய்தார். மிகவும் குறைந்த அளவுதான் கட்டணமாக வாங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக வாதாடினார்.  
1858ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக மாநில செனட்டர் தேர்தலில் போட்டியிட்டார்.  ஆனால்,
அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். ஆயினும், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஆப்ரகாம்லிங்கன் 1859ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் (ஜனாதிபதி) வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘அடிமை முறையை ஒழிப்பதையே தன் வாழ்நாளின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர் லிங்கன். அதனால், அவர் ஆட்சிக்கு வந்தால் தங்களின் அடிமை வியாபாரம் பாதிக்கப்படும்’ என அஞ்சினர் அமெரிக்காவின் தென் மாநிலத்தவர்கள். அந்த முறை ஜனாதிபதி தேர்தலில் நடந்த நான்குமுனை போட்டியால் லிங்கன் வெற்றி வாகை சூடினார். 

நாளுக்குநாள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெற்கு மாநிலங்கள் ஒவ்வொன்றும் பிரிந்து போய்க்கொண்டிருந்தது. ஏழு மாநிலங்கள் சேர்ந்து கான்பெடரேசி என்ற தென்னகக் கூட்டு அரசாங்கத்தை நிறுவியது. இதனால் இரண்டு அரசாங்கங்களாகப் பிளவுற்றது அமெரிக்கா. இந்நிலையில்,1861ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி அன்று ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராக (ஜனாதிபதி யாக) பதவியேற்றார். 
அடுத்த கணமே அவருக்கெதிராக எதிர்ப்பலைகள் அதிகரிக்கத் தொடங்கின. அதன் விளைவாக, உள்நாட்டுப் போரும்  மூண்டது. அதன் விளைவாக, தெற்கு கரோலினா அமெரிக்காவிலிருந்து பிரிந்துபோனது. ஆனால், துறைமுகக் கோட்டையான சம்டர் மட்டும் அமெரிக்கா வசம் இருந்தது. அங்கே தென்பகுதி படையினால் அமெரிக்க யூனியன் ராணுவம் விரட்டியடிக்கப்பட்டது. படைபலத்தைக் கூட்ட கட்டாய ராணுவ சேவை அமலுக்கு வந்தது. அதன்மூலம் சுமார் ஒன்றரை லட்சம் வீரர்கள் ராணுவத்தில் உடனடியாக சேர்க்கப்பட்டனர்.
லிங்கனின் பதவிக்காலத்தில் பெரும்பாலும் உள்நாட்டுப் போரிலேயே முடிந்துபோனது. 

உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில், அமெரிக்க யூனியன் தோல்வியைத் தழுவ நேரிட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி பயணித்தது. ‘பிரிந்துபோன மாநிலங்கள் மூன்று மாத காலத்தில், யூனியனுடன் ஐக்கியமாகாவிட்டால், அனைத்து அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிடுவார்கள்’ என்று லிங்கன் ஓர் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். 

1863ஆம் ஆண்டு, சனவரி 1ஆம் தேதி அடிமைகளின் விடுதலைப் பிரகடனம் அமலுக்கு வந்தது.. 
அதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து அடிமைகளும் விடுதலைப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ‘பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்; கறுப்பினத்தவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு’ என்று முழக்கமிட்டுவந்த லிங்கன், ஒரு வழியாகத் தான் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடித்தார். நிறவெறி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்மூலம் கறுப்பின மக்களின் விடுதலைக்கு வித்திட்ட மாமனிதரானார் ; ஆப்ரகாம் லிங்கன்.

இந்நிலையில்,1863ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க யூனியனுக்குப் போர் முனையில் வெற்றி கிட்ட ஆரம்பித்தது. 1864ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபரானார். 

மேலும் படிக்க | Pervez Musharraf: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

1865-ம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் தென்னகப் படையின் தளபதி ராபர்ட் லீ சுற்றிவளைக்கப்பட்டார். அதோடு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. உள்நாட்டுப் போர் முடிந்தகையோடு, ஐந்தே நாட்களில், அதாவது ஏப்ரல் 15ஆம் நாள், கறுப்பின மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததைப் பொறுக்காமல் தென்னக ஆதரவாளர் ஜான் வில்கிஸ் பூத் என்பவர் ஆப்ரகாம் லிங்கனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அத்துயரச் சம்பவம் அங்குள்ளவர்களை மிகுந்த சோகத்துக்கு உள்ளாக்கியது. அவரது இறப்பைத் தாங்கிக்கொள்ளாத முடியாதநிலையில் பலரும் துடிதுடித்துப் போனார்கள் ; கண்ணீர்விட்டு கதறினார்கள் ; அக்கதறலானது கட்டுக்குள் அடங்காமல் அந்நாடெஙகும் எதிரொலித்தது.

ஆனால், “பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்” என்பதை தன் இறப்புக்கு முன்னால் நிரூபித்து காட்டினார் ; மாமனிதரான ஆப்ரகாம் லிங்கன்.  அது மட்டுமின்றி ;
ஒழுக்கத்துக்கு ஆப்ரகாம் லிங்கன் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதற்கு அவர், அவரது மகனின் தலைமையாசியருக்கு எழுதிய கடிதமே அதற்குத் தக்க சாட்சியாகும். 

மேலும் இன்றைய தலைமுறையினர்களில் குறிப்பாக, மாணவச் செல்வங்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய பெட்டகமாக அக்கடிதம் இன்றளவும் திகழ்கிறது.
அவற்றின் சுருக்கம் :

“அன்புள்ள தலைமை ஆசிரியர் அவர்களுக்கு என் மகன் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உலகில்  எல்லா மனிதர்களுமே நீதிமான்கள் அல்ல எல்லோருமே உண்மையானவர்களும் அல்ல இதனை நான் அறிவேன்.
ஆனால் ஒருமோசமான மனிதன் இருக்கிறான் என்றால் அதே நேரத்தில் ஒரு வீரனும் இருக்கிறான் என்பதை என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுயநலமிக்க ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் இணையாக தன்னையே அர்ப்பணிக்கும் தலைவனும் இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு பகைவனுக்கும் இணையாக ஒரு நண்பனும் இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். இதற்கெல்லாம் அதிக காலம் ஆகும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் கற்றுக் கொடுங்கள். கிழே கிடக்கின்ற ஐந்து டாலர்களைக் காட்டிலும்,உழைத்துச் சம்பாதிக்கிற ஒரு டாலர் அதிக மதிப்புமிக்கது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
இழப்பதற்குத் தயாராக அவன் இருக்க வேண்டும்.
வெற்றிகளை அவன் அனுபவிக்க வேண்டும்.
பொறாமையிலிருந்து அவன் விலகி இருக்க வேண்டும்.
அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியை,
சிரிப்பை, அதன் ரகசியங்களை முடியுமானால் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

புத்தகங்களில் புதைந்து கிடக்கின்ற அற்புதங்களை அவன் அறியட்டும்.
அதே நேரத்தில் மலையடிவாரங்களின் பசுமை,
பூத்துக்குலுங்கும் மலர்கள், வானத்தில் பறக்கும் பறவைகள் இவற்றில் எல்லாம் பொதிந்து கிடக்கின்ற எல்லையற்ற,
முடிவற்ற சிருஷ்டி ரகசியங்களை முடியுமானால் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
ஏமாற்றுவதைக் காட்டிலும்,
மோசடி செய்வதைக் காட்டிலும் தேர்வில் தவறுவதே (ஃபெயிலாவது) சிறந்தவை என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்!

மற்றவர்கள் எப்படி எதைச் சொன்னாலும் சொந்தமாக உருவாகும் யோசனைகள்-
எண்ணங்கள் சிறந்தவை என்பதை அவன் உணருமாறு செய்யுங்கள்!
பெருந்தன்மை படைத்தவர்களிடம் பெருந்தன்மையுடன் கடுமையானவர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்ள அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
கூட்டம்கூட்டமாக ஆரவாரத்துடன் ஏராளமானவர்கள் செல்லும்போது அந்த அணியில் சேர்ந்துகொள்ளவே பலரும் துடிப்பார்கள்.அது போன்ற மந்தைகளில்- பெரும் ஆரவாரக் கூட்டங்களில் சேராது இருக்கும் வலிமையை எனது மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

யார் என்ன சொன்னாலும் பொறுமையுடன் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்ட வேண்டும். அப்படிக் கேட்டதை எல்லாம் ‘உண்மை’ என்கின்ற சல்லடையில் சலித்து  வடிக்கட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த முறையில் மூலம் பெறப்படுகின்ற கருத்துகள் மட்டுமே ஏற்க வேண்டும். இந்தப் பண்பையும் என் மகனுக்கும் கற்றுக் கொடுங்கள்.

அன்புடன்,
ஆப்ரகாம் லிங்கன்

இதுவே அக்கடிதத்தின் உட்கருத்தாகும். “கல்வியின் நோக்கம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதுதான்” என்றார், சுவாமி விவேகானந்தர் ; ஒழுக்கம் இல்லாத கல்வி பயனற்றது என்றார், சீனத் தத்துவஞானி கன்பூசியஸ். ஆகவே, ஒழுக்கமே முன்னேற்றத்துக்கான மூலதனம் ஆகும் என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

ஏனெனில், தனிமனித ஒழுக்கம் ஒரு மனிதனை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் ஒரு தலைசிறந்த முன்னோடியாவார்.  அவரது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து அவர் காட்டிய நல்வழியை நாமும் பின்பற்றுவோம்.

மேலும் படிக்க | ஆளுநராகும் மற்றொரு தமிழர்… ஜார்க்கண்டில் சி.பி. ராதாகிருஷ்ணன் – ஆளுநர் மாற்றம் முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.