ஆரணி ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ், கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயபிரியா. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயப்பிரியா உடல்நிலை சரியில்லாமல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை முடிந்து ஆரணி பஸ்நிலையம் வந்தார். அங்கிருந்து வாழைப்பந்தல் கிராமத்திற்கு செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏறினார். ஆரணி அடுத்த மாமண்டூர், மேல்புதுப்பாக்கம் சென்றபோது அனைவரும் இறங்கிவிட ஜெயப்பிரியாவும் அவரது குழந்தைகள் மட்டுமே இருந்தனர். இதனால், டிரைவரும், கண்டக்டரும் மேல் புதுப்பாக்கத்துடன் ஆரணிக்கு திரும்ப முடிவு செய்து அவர்களை அங்கேயே இறங்கும்படி கூறினர். அதற்கு ஜெயப்பிரியா, வாழைப்பந்தலுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால், குழந்தைகளுடன் நடந்து செல்ல முடியாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் டிரைவர், கண்டக்டர் மீண்டும் அவர்களை ஆரணி பஸ்நிலையத்திற்கே அழைத்து வந்து, வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மயங்கி விழுந்த ஜெயபிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள், அன்று இரவு வாழைப்பந்தல் கிராமத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ்சை முற்றுகையிட்டு டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியபின் பஸ்சை விடுவித்தனர். தகவலறிந்த கலெக்டர் முருகேஷ், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விசாரணைக்கு பின் கலெக்டர் உத்தரவின்பேரில் கடிரைவர் சண்முகம், கண்டக்டர் சீனிவாசன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.