கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், இந்தாண்டு எருதுவிடும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியிருக்கிறது. கடந்த, 2–ம் தேதி, கிருஷ்ணகிரி – பெங்களூர் நெடுஞ்சாலை அருகிலுள்ள சூளகிரியை அடுத்த கோபசந்திரம் பகுதியில், எருதுவிடும் விழா நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டிருந்தனர்.

இந்த விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க தாமதம் ஏற்பட்ட நிலையில், இதைக் கண்டித்த இளைஞர்கள், பார்வையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். போலீஸார்மீது கல் வீச்சு, இளைஞர்கள்மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என போராட்டம் கலவரமானது. பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
‘ஓசூர் கலவரம் உளவுத்துறையின் தோல்வி’ என, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். ஓசூர் கலவரம் குறித்து, கடந்த, 8-ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழிலில், ‘‘ஆமை வேக மாவட்ட நிர்வாகம்… கோட்டைவிட்ட உளவுத்துறை… ஓசூர் எருதுக்கட்டு கலவரப் பின்னணி!’’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
கூண்டோடு டிரான்ஸ்பர்…
இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 30 தனிப்பிரிவு போலீஸாரை, ஒரே இரவில் கூண்டோடு டிரான்ஸ்ஃபர் செய்து, உத்தரவிட்டிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன்களைப் பொறுத்தவரையில், SB என்ற தனிப்பிரிவு போலீஸார், ஸ்டேஷன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நடக்கும் அனைத்தையும் கண்காணித்து, நேரடியாக அனைத்துத் தகவல்களையும் மாவட்ட எஸ்.பி-க்கு தெரிவிக்கும், உளவுத்துறையாக இருக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில், 30 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. இவற்றிலுள்ள அனைத்து SB–க்களும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு, அருகருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
நாம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்ததற்கு, “ஓசூர் கலவரம் குறித்து காவல்துறைமீதான குற்றச்சாட்டை சமாளிக்க, மாவட்ட எஸ்.பி டிரான்ஸ்ஃபர் நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறார்’’ என்கின்றனர்.