
ஜப்பானுக்குச் சொந்தமான ஒகினாவாவிலுள்ள யானாஹா தீவை வாங்கியிருப்பதாக சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அடையாளம் தெரியாத மர்மப் பொருள் கனடாவின் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ஜெட் உதவியுடன் அழிக்கப்பட்ட இந்தப் பொருள் என்ன என்பது குறித்து ஆராயப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் அர்மேனியா-துருக்கி இடையிலான பாதை திறக்கப்பட்டிருக்கிறது. முதலாம் உலகப்போரில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1990-ல் முற்றிலுமாக அந்தப் பாதை மூடப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் துருக்கிக்கு உதவ மீண்டும் அந்தப் பாதை திறக்கப்பட்டு, அதன் வழியே உதவிகள் வழங்கப்படுகின்றன.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 129 மணி நேரம், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், உயிருடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

பாகிஸ்தானில், நன்கானா சாஹிப் என்ற இடத்தில் இறை நம்பிக்கையைப் புண்படுத்தக்கூடிய செயலில் (Blasphemy) ஈடுபட்ட வாரா இஸ்ஸா என்ற நபர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அடையாளம் தெரியாத கும்பல், சிறையிலிருந்து வெளியே இழுத்து பொது இடத்தில் அடித்துக் கொலைசெய்திருக்கிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் துருக்கிக்கு மூன்று மாதங்களுக்கு அவசரக்கால விசா (Emergency Visa) வழங்க ஜெர்மனி அரசு முடிவுசெய்திருக்கிறது.

வங்கதேசத்தில் இரண்டு பாடப்புத்தகங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக, அந்தப் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டன.

இலங்கை கடற்பகுதியில் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த 11 பைலட் திமிங்கிலங்கள் மீட்கப்பட்டு, நடுக்கடலில் கொண்டு விடப்பட்டன. 14 பைலட் திமிங்கிலங்கள் இருந்த நிலையில், அதில் மூன்று திமிங்கிலங்கள் ஏற்கெனவே இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் இசைக் கலைஞரான AKA என்ற கைர்னன் ஃபோர்ப்ஸ் (Kiernan Forbes) டர்பனில் சுட்டுக் கொல்லப்பட்டார். 35 வயதாகும் இவர் தன் நண்பருடன் காரில் ஏறும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிழக்கு ஜெர்மனியின் கடைசி கம்யூனிஸ்ட் பிரதமரான Hans Modrow காலமானார். அவருக்கு வயது 95. இவர் ஜெர்மனியில் ஜனநாயக சீர்திருத்தங்கள் கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.