சிவலாயங்கள் நிறைந்த ஆன்மீக மண் நம் தமிழ்நாடு!

இந்தியாவின் சிவாலயங்களில் பாதிக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் நமது தமிழ்நாட்டில் உள்ளது நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.  தமிழகத்தில் மட்டுமே 2500 சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். மற்ற பேரரசுகளின் காலத்திலும் பல ஆலயங்கள் கட்டப்பட்டன. இந்த கோயில்கள் வெவ்வேறு விதமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களாகும். திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் கோபுர வடிவமைப்பைப் பார்த்துதான் ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலைக்கட்ட தீர்மானித்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. தஞ்சை கோபுரத்தில் நிழல் தரையில் விழாது என்பதைப்போல இந்த திருவதிகை கோயில் கோபுரத்தின் நிழலும் தரையில் விழாத வண்ணம் கட்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலியின் நெல்லையப்பர் ஆலயம் தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். கி.பி 700-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக்கோயிலில் பார்வதி அம்மையாருக்கும் தனியான ஒரு கோயிலாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.   திருவொற்றியூரின் தியாகராஜர் திருக்கோயில் பல்லவ மன்னர்களால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். ஒவ்வொரு வருடமும் மயூரா நாட்டியாஞ்சலி நடக்கும் மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதஸ்வாமி திருக்கோயில், எப்போதும் தண்ணீரில் இருக்குமாறு அமைந்துள்ள பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்கோயிலில், உலகத்தையே ஆச்சர்யமாகப் பார்க்கவைக்கும் அதி பிரம்மாண்ட கட்டிடக்கலை கொண்ட ஈடிணையில்லா தஞ்சை பெரிய கோயில் ஆகியவை உலகறிந்த உன்னத திருத்தலங்கள்.

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் மனித உடலின் அமைப்புகளை சார்ந்து அமைக்கப்பட்டு மனித உடலே கோயிலாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள ஐந்து சுற்று பிரகாரங்கள், மனித உடலின் அன்னமயம், பிராணமயம், மனோமயம், ஞானமயம், ஆனந்தமயம் ஆகியவற்றை குறிக்கின்றன. பரபரப்பான சென்னையின் நடுவே அமைந்துள்ள அற்புதமான சிவாலயம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், ராமபிரான் வணங்கிய ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாதஸ்வாமி திருக்கோயில், அஷ்டலிங்கங்களை உடைய பஞ்சபூத ஸ்தலமான திருவண்ணாமலை, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. 

வார்த்தைகளில் வடித்துவிடமுடியாத நேர்த்தி, துளியும் பிசகாத கணக்கீடுகள், உச்சபட்ச பொறியியல் நுட்பங்கள், ஆச்சர்யப்படுத்தும் அறிவியல் அளவீடுகள் உள்ளிட்ட பல  சிறப்பம்சங்களோடு இருக்கும் திருத்தலங்கள் நமது ஆன்மீக மரபை மட்டுமல்லாது சிறந்த கட்டிடக்கலையையும், தெளிந்த தொலைநோக்கு பார்வையையும் பறைசாற்றுகின்றன.  தமிழகம் என்றாலே கோயில்கள் என்று தான் அறியப்படுகிறது. ஏனெனில் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் என எல்லா இடங்களிலும் ஒரு புராதனக் கோயில் இருப்பதைக் காணலாம். அப்படி ஒரு பக்தி நிரம்பிவழியும் கலாச்சாரம் நம்முடையது. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான கோயில்கள் மட்டுமல்லாது சிறிய அளவுகளில் கூட சக்திமிக்க  பல கோயில்கள் உள்ளன. 

நமது தொன்மையான கலாச்சாரம் உருவாக்கிய கோயில்கள் நமது தேவைகளுக்காகவோ, வேண்டுதல்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. முக்திக்கான வழிகாட்டியாக, வினைகளைக் கரைக்க உதவும் வீரியஸ்தலங்களாக வீற்றிருக்கும் நம் திருத்தலங்கள். கோயில்களுக்கு சென்று வருவதையே கொண்டாட்டமாக செய்து வருவது நம் மரபு. அப்படியொரு நிகழ்வுதான் மஹாசிவராத்திரிக்கு பாத யாத்திரையாக வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதும்.  ஆம், ‘தென் கயிலாயம்’ என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. ஏழு மலை அடுக்குகளாக உள்ள இந்த மலை ஸ்தலம் அற்புதமானதொரு சிவ ஸ்தலம். ஒவ்வொரு வருடமும் தென் கைலாய பக்திப் பேரவை நடத்தும் ஆதியோகி ரத யாத்திரை மஹா சிவராத்திரி காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப்பேரவை நடத்தும் இந்த சிவாங்கா யாத்திரையில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவ நமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர்.  சலிப்பான வாழ்க்கையிலிருந்து பாதையை மாற்றி நமது உள்நிலையை கவனித்தால் தான் புறச்சூழலும் நன்றாக அமையும் என்பதை உணர்ந்த பலரும் இந்த சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு, அளப்பரிய பலன்களை பெறுகிறார்கள். அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்கள் ஆகியோர் கொண்ட ரதங்களை 500 கிலோமீட்டர், 700 கிலோமீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து ரதங்களை இழுத்து வருகின்றனர். இத்தனை தூரம் ரதங்களை இழுத்து வந்தும், களைப்பில் உட்கார்ந்துவிடாமல் மகேசனைக்காண  வெள்ளியங்கிரி மலை ஏறி வருகிறார்கள் இந்த தீவிர பக்தர்கள். 

பல நாட்களாக இருந்த உடல் உபாதைகள், குடும்ப வாழ்வின் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள் என எல்லாமே நாம் வேண்டியதைப் போல கிடைத்தன என்று பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனை உணர்ந்து அனுபவித்த அவர்கள் ஒவ்வொரு வருடமும்  திரும்பத் திரும்ப சிவாங்கா யாத்திரை வருவதைப் பார்ப்பதே சிலிர்ப்பானதொரு பக்தி அனுபவமாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.