சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம்… குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் 13 மாநில ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (பிப்ரவரி 12) காலை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாநிலத்தில் தற்போது முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் ஆளுநர்

இது காங்கிரஸ் உடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆளும் அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ் மகாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

சேலத்தில் ஸ்டாலின்; ஒரே கல்லுல நாலு மாங்கா… திமுக உ.பி.,க்களுக்கு மெகா அசைன்மென்ட்!

இல.கணேசன் மாற்றம்

அதுமட்டுமின்றி மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் தற்போது நாகாலாந்து மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

தேர்தல் வியூகம்

அடுத்தகட்டமாக 2024 மக்களவை தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் வாக்கு வங்கியை அதிகரிக்கவும், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை பெருவாரியான எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்யவும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழக பாஜகவில் முக்கிய பங்காற்றி வருபவர்களை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அளவில் முக்கிய பொறுப்புகளை பாஜக தலைமை அளித்து கொண்டிருக்கிறது.

பாஜக தலைவர்களுக்கு பதவிகள்

இதனை தேர்தலில் ஒரு யுக்தியாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனை தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக நியமித்தனர். அடுத்து மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டார். அவருக்கு மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு மாநிலத் தலைவரான எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தனர்.

கைவிரித்த வேலுமணி… எடப்பாடி சொன்ன ஐடியா… ஈரோடு கிழக்கில் திமுகவிற்கு செம டஃப்!

யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

அந்த வரிசையில் தற்போது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் பொறுப்பு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியின் அதிகார மட்டம் தமிழ்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை பார்க்க முடிகிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த பாஜக தலைவர். கோவை பாஜகவின் முகமாக திகழ்ந்து வந்தவர். இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசு பதவி

தற்போது பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் மத்திய அரசின் அகில இந்திய கயிறு வாரிய தலைவராக இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, பாஜக மற்றும் மத்திய அரசில் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.