சேலம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்றதும், பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததுமான சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு வருடப் பிறப்பு, ஆடி வெள்ளி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை கடைசி வெள்ளி ஆகிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை தாயாருக்கு நான்கு கால பூஜைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.

குறிப்பாக தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுகவனேஸ்வரருக்கும் சொர்ணாம்பிகைத் தாயாருக்கும் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சொர்ணாம்பிகைத் தாயாருக்குப் பட்டாடை உடுத்தி தங்கக் கவச சாத்துப்படி நடைபெற்றது. பின்னர் பல்வேறு விதமான வாசனை மலர்களால் அம்மனுக்கு மாலைகள் சாத்தப்பட்டன இதனைத் தொடர்ந்து தை கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சுமார் 18,000 வளையல்களால் சாத்துப்படி வைபவம் நடைபெற்றது.
பின்னர் சிவாசார்யர்கள் வேதங்கள் முழங்க லட்சார்ச்சனை நடைபெற்று மகாதீபாரதனைக் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்பட்ட 18,000 வளையல்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த நாளில் சொர்ணாம்பிகை அம்மனை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்யப் பேறு, குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தைப் பேறு உண்டாகுதல், பல்வேறு நோய்களில் இருந்து குணமடைதல், வம்பு, வழக்குகளில் இருந்து விடுதலை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தை கடைசி வெள்ளிக்கிழமை அன்று சொர்ணாம்பிகைத் தாயாரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்குச் சாத்தப்பட்ட வளையல்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வளையலைப் பெற்றுச் சென்றனர். அம்மனை தரிசனம் செய்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.