திருவண்ணாமலையில் மர்ம நபர்கள் சிலர் நான்கு ஏ.டி.எம் மையங்களில் பணம் இருக்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் 48 இடங்களில் போலீஸார் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், கொள்ளையர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸார் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் கார், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் போலீஸார் தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்புகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளான அணைக்கரை பாலம், விளாங்குடி பாலம், புதுக்குடி, கிழக்குகடற்கரை சாலை உள்ளிட்ட எட்டு இடங்களில் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைந்திருக்கின்றன. வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அந்த இடங்களின் வழியாகவே தஞ்சாவூர் எல்லைக்குள் நுழைய முடியும்.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தின் நுழைவு வாயிலான எட்டு எல்லை சோதனைச் சாவடிகளிலும், மாவட்டம் முழுவதும் 40 இடங்களிலும் போலீஸார் கார், வேன், லாரி என ஒரு வாகனம் விடாமல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகனத்தில் வருபவர்களிடம் சோதனைக்குப் பிறகு, எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இது குறித்து சோதனையில் ஈடுபட்டு வரும் போலீஸார், “எஸ்.பி ஆசிஷ்ராவத் உத்தரவின்படி இந்த வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை கும்பல் எந்த வழியிலும் தப்பிச் செல்லாமல் இருக்கவே தீவிர சோதனை நடத்துகிறோம்” என்று தெரிவித்தனர்.