துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் திங்களன்று ஒரேநாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று அதிபயங்கர நிலநடுக்கங்கள், துருக்கி, சிரியா மட்டுமின்றி உலக நாடுகளையே அதிரவைத்தன. பெரியவர்கள், கர்ப்பிணிகள், மழலைகள் என கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட அனைவரையும் மீட்கும் பணி ஒருவாரமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுவரையில் மட்டும் சுமார் 28,000 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டிவருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு துருக்கியில் நிலநடுக்கத்திலிருந்து தப்பிப் பிழைத்த 9 வயது சிறுவன் ஒருவன், தான் உண்டியலில் சேர்த்துவைத்த மொத்த சேமிப்பையும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பிவைத்திருக்கும் செயல் பலரையும் நெகிழவைத்திருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி, அல்பார்ஸ்லான் எஃபே டெமிர் (Alparslan Efe Demir) என்றறியப்படும் இந்தச் சிறுவன், கடந்தாண்டு நவம்பரில் வடமேற்கு டஸ்ஸ் (Duzce) மாகாணத்தில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை பிரசிடென்சி (AFAD) அமைத்த கூடாரங்களில் வாழ்ந்து வந்திருக்கிறான். இத்தகைய சூழ்நிலையில், துருக்கியில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவவேண்டும் என அல்பார்ஸ்லான் எஃபே டெமிர் தன் தாயாரிடம் கூறியிருக்கிறான். அதன்படி தான் சேமித்த பணத்தைச் சிறுவனும், அவனின் தாயாரும், துருக்கிய செஞ்சிலுவைச் சங்கத்தின் டஸ் கிளை அதிகாரிகளிடம் கொடுத்திருக்கின்றனர். அதோடு அந்தச் சிறுவன், பாதிக்கப்பட்டோருக்கு ஒரு கடிதமும் எழுதி அனுப்பியிருக்கிறான்.

அந்தக் கடிதத்தில், “டஸ்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் மிகவும் பயந்தேன். அதே பயம், நமது நகரங்கள் பலவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதைக் கேள்விப்பட்டபோது இருந்தது. அதனால்தான், பெரியவர்கள் கொடுத்த பாக்கெட் மணியை அங்குள்ள குழந்தைகளுக்கு அனுப்ப முடிவு செய்தேன். நான் இங்கே சாக்லேட் வாங்காமலிருந்தாலும் பரவாயில்லை, அங்குள்ள குழந்தைகளுக்கு குளிரோ, பசியோ ஏற்படக்கூடாது. அங்குள்ள குழந்தைகளுக்கு எனது உடைகள், பொம்மைகளை அனுப்புவேன்” என்று அல்பார்ஸ்லான் எஃபே டெமிர் எழுதியிருக்கிறான்.
சிறுவனின் செயலுக்கு அனைவரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.