புதுடெல்லி: புதிய வருமான வரி விதிப்பு முறையால் நடுத்தர மக்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என தெரிவித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலீடு குறித்து அவரவர் சுயமாக முடிவெடுக்கும் வாய்ப்பை தந்திருப்பதாக கூறி உள்ளார். கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய வருமான வரி விதிமுறையால், மக்களிடம் சேமிப்பு பழக்கம் பெருமளவு குறையும் எனவும், வரிக் கழிவுகளை பெற அரசு காப்பீடு திட்டங்களில் இணைவோர் எண்ணிக்கை வெகுவாக பாதிக்கப்படும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற ஒன்றிய நிதி அமைச்சர் கூறியிருப்பதாவது: புதிய வருமான வரி விதிப்பு முறை, வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த பலன்களை தரும். புதிய வரி முறையை கடைபிடிக்கும் நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிலையான கழிவு தரப்பட்டுள்ளதால், வரி பிடித்தம் போக கூடுதலான பணம் அவர்கள் கைகளுக்கு கிடைக்கும். பணம் சம்பாதித்து தனது குடும்பத்தை நடத்தும் ஒரு நபர் தனது பணத்தை எங்கு சேமிக்க வேண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கும் அளவுக்கு புத்திசாலிகள்.
அவர்களை குறைத்து மதிப்பிட நாங்கள் விரும்பவில்லை. எனவே அரசு திட்டங்கள் மூலம் தனிநபர்களை முதலீடு செய்ய தூண்ட வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து. புதிய வருமான வரியால், முதலீடுகள் குறித்து அவரவர் சுயமாக முடிவெடுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த நடவடிக்கையானது நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. நேரடி வரி விதிப்பை எளிமையாக்குகிறது. கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்தவதற்கான பொதுவான கட்டமைப்பு உருவாக்குவது குறித்து ஜி20 நாடுகளுடன் விவாதித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
* அதானி விவகாரம் அவங்க மேட்டர்
அதானி குழும நெருக்கடி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘நமது நிதி கண்காணிப்பு அமைப்புகள் மிகுந்த அனுபவம் வாய்ந்தவை. தங்கள் துறையில் வலுவான நிபுணத்துவம் பெற்றவை. அவர்கள் இந்த விஷயத்தை கவனித்து வருகிறார்கள். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இதுபோன்ற விஷயங்களை நிதி அமைப்புகளே கண்காணிக்கும்’’ என்றார்.