”பிரதமருக்கு எதிராக அப்படி பேசுவதா?” – ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

பிரதமர் மோடி குறித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு வரும் 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கடந்த 7ஆம் தேதி பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு குறித்துப் பேசியதுடன், அது சம்பந்தமாக 4 முக்கியக் கேள்விகளையும் எழுப்பியிருந்தார். மேலும், அதானி குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் பேசியிருந்தார். இந்நிலையில், ”தனது குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி ஆதாரம் எதையும் சமர்ப்பிக்காததால் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
image
அதில், ”குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற, அவதூறான, களங்கம் விளைவிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார். தனது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் சபைக்கு அளிக்கவில்லை. எனவே, அவர் சபையை தறவாக வழிநடத்தி இருக்கிறார். சபை விதிகளை மீறி இருக்கிறார். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதுபோல், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசியது தொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோர் எழுதிய உரிமை மீறல் நோட்டீஸுக்கு பதில் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு, பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.