புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் (தென்னலூர்) முத்து மாரியம்மன் கோயில் தை திருவிழாவையொட்டி இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தினர் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது.
தஞ்சை, புதுகை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், ெபரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பாபு தலைமையில் 9 கால்நடை உதவி மருத்துவர்கள், 15 உதவியாளர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ குழந்தைசாமி துவக்கி வைத்தனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கோ, சிறந்த காளைகளுக்கோ எந்தவிதமான பரிசுகளும் வழங்குவதில்லை. இருப்பினும் காளை வளர்ப்பவர்கள் வேண்டுதலுக்காக இங்கு காளைகளை அழைத்து வருகின்றனர்.
அதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது. களத்தில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மிக்சி, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள், ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் 180க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.