மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கின் ராஜினாமா ஏற்பு; ரமேஷ் பாய்ஸ் புதிய ஆளுநராக நியமனம்!

மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் பகத் சிங் கோஷாரி கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக சத்ரபதி சிவாஜி உட்பட வரலாற்று தலைவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பின. இதையடுத்து அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. மகாராஷ்டிரா பா.ஜ.க-கூட இந்தக் கோரிக்கையை முன்வைத்தது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மும்பை வந்திருந்தார். இதில் கலந்துகொண்ட ஆளுநர் பகத் சிங் தன்னை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படியும், எஞ்சிய காலத்தை புத்தகம் எழுதியும், குடும்பத்தினடனும் கழிக்கப்போவதாகவும் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

பகத் சிங்

அதனை கேட்டுக்கொண்ட பிரதமர், தற்போது அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். குடியரசுத் தலைவர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கின் ராஜினாமா ஏற்கப்படுவதாகவும், அவருக்குப் பதில் ரமேஷ் பயாஸ் நியமிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழம்பெரும் ஆர்.எஸ்.எஸ்-வாதியான பகத் சிங் முதல்வர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் வகித்துவிட்டார். கடந்த 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்ட பகத்சிங், 2019-ம் ஆண்டு அதிகாலையில் தேவேந்திர பட்னாவிஸுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரேவுடன் பகத் சிங் தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தார். மகாராஷ்டிரா சட்டமேலவைக்கு நியமன உறுப்பினர்கள் நியமிக்கவேண்டியிருந்தது. மாநில அரசு அனுப்பி வைத்த பரிந்துரையை ஆளுநர் நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டார். இந்தப் பிரச்னை மும்பை உயர் நீதிமன்றம் வரை சென்றது. பகத் சிங் கோஷாரி மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், அவர் தனது சொந்த மாநிலத்துக்குச் செல்ல அரசு விமானத்தைக் கொடுக்க உத்தவ் தாக்கரே அரசு மறுத்துவிட்டது. அதோடு, `மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்தியர்களும், ராஜஸ்தானியர்களும் சென்றுவிட்டால் இங்கு பணமே இருக்காது’ என்று சர்ச்சையையும் பகத் சிங் கிளப்பினார்.

ரமேஷ் பாய்ஸ்

தற்போது புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ரமேஷ் ஜார்க்கண்ட், திரிபுரா மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியவர். ரமேஷ் பாய்ஸ் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். முதன் முறையாக 1978-ம் ஆண்டு ராய்பூர் மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரமேஷ், அதன் பிறகு 1980-ம் ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பல முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கும் ரமேஷ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். 2019-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை திரிபுரா ஆளுநராகவும், அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.