மனதை திறந்தால் கதைகள் வரும்: 'கில்லி 'அம்மா ஜானகி சபேஷ் பேட்டி

கில்லி திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நமக்கு பரிட்சயமானவர். “காலைல எழுந்ததும் இரண்டு விஷயம் தவறாம பண்ணனும்! ஒன்னு சாமி கும்பிடனும் அது உனக்கு நல்லது. இன்னொன்னு குளிக்கனும். அது உன்ன சுத்தி இருக்குறவங்களுக்கு நல்லது,” என கலக்கலான வசனங்களுக்கு சொந்தக்காரர். வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். மின்சார கனவு திரைப்படத்தில் அறிமுகமாகி ஜீன்ஸ், ஆயுத எழுத்து, சிங்கம் 1, 2, அயன் உள்ளிட்ட திரைப்படங்களில் அம்மாவாக நடித்துள்ளார். விளம்பரத்துறை, திரைப்படம், குரல், நாடக கலைஞர், தற்போது கதை சொல்லி என பன்முக தளங்களில் பரிணமித்து வருகிறார்.அவரிடம் பேட்டி கண்ட போது….

கில்லி அம்மா கதை சொல்லி ஆனது எப்படி
சிறுவயதில் இருந்தே கதைகள் பிடிக்கும். என் அப்பா அலுவலகம் போய் வருவதையே பெரிய கதை போல ருசிகரமாக கூறுவார். எனக்கும் அவரை போல் நிகழ்வுகளை ஒரு கதை போல கூறுவது பிடிக்கும். பி.சி.ஸ்ரீராம், ஜெயேந்திரா ஆகியோருடன் விளம்பரத்துறையில் 18 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினேன். 2019ல் எனது பணியை விட்டு விட்டு கதை சொல்லியாக முடிவெடுத்தேன். கதைகள் மூலம் உளவியல், உணர்வு பயிற்சிகள் அளிக்கிறேன். அழகாக நேர்த்தியுடன் கதை எப்படி சொல்வது என்பதையும் பயிற்சி அளிக்கிறேன். கல்லுாரிகளுக்கு பாடப்பிரிவை எப்படி கதையாக மாற்றலாம் என்றும் விவரிக்கிறேன். கதை மூலம் சொல்வதால் கேட்பது எல்லாம் ஞாபகத்தில் இருக்கும்.

குழந்தைகளுக்கான கதைகள் எழுதி இருக்கிறீர்களா
'காட்டின் கதை திருவிழா' என்ற கதை புத்தகம் எழுதி உள்ளேன். நெருப்புக்கோழிக்கு திக்குவாய். காட்டில் கதை திருவிழா நடக்கிறது. அதை யாரும் அனுமதிப்பதில்லை. அது எப்படி திக்குவாய் பிரச்னையை தாண்டி கதை கூறுகிறது என்பது தான் கதை. 2018ல் வெளியானது. 9 மொழிகளில் உள்ளது. 2021ல் 'பாட்டியின் ரசம்' என்ற கதை புத்தகம் எழுதினேன். இது பாட்டி, பேத்தியின் கதை. என் அம்மாவிடம் இருந்து இன்ஸ்பையராகி எழுதினேன். பாட்டி செய்யும் ரசம், மல்லி எனும் சிறுமிக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு பிறகு ரசத்தை யார் செய்கிறார்கள் என்பது தான் கதை. இந்த கதை ஜாரூல் புக் விருது பெற்றுள்ளது. இது தவிர நாடக கதை ஒன்றும் எழுதி உள்ளேன். தாகமுள்ள காகம் கதையை வித்தியாசப்படுத்தி உள்ளேன்.

சிறுவயதில் ஆசிரியர் ஆக ஆசைப்பட்டீர்கள். தற்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு செல்லும் போது எவ்வாறு உணர்கிறீர்கள்.
பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் போது ஆசிரியர் உணர்வு எனக்கு வந்து விடுகிறது. இதை கதை சொல்லும் பயிற்சி என வெளியில் நினைத்தாலும், கேட்பவர்களுக்கும், சொல்லும் எனக்கும் ஆசிரியர், மாணவருக்கு இடையே இருக்கும் உறவு போன்று இருக்கிறது..

நடிப்பை மிக ஜாலியாக செய்கிறீர்களே..
நான் பிரபஞ்சத்தின் நம்பிக்கையாளர். அப்படி ஏதாவது என் வாழ்வில் நடக்க வேண்டும் என்றால் நிச்சயம் அது நடக்கும். நானே அதற்கு பின்னால் போவது பிரயோஜனமில்லை. வாய்ப்பு வந்தால் நோ சொல்லாதே என என் அப்பா கற்று தந்துள்ளார். சிறுவயதில் போட்டிகளில் துவங்கிய என் பங்கேற்பு விளம்பரம், கார்ப்பரேட் வாழ்க்கை, நடிப்பு, தற்போது கதை சொல்வது என எல்லாவற்றிலும் வந்து விட்டது. நான் இரண்டு சீன்களில் வந்தாலும் வசனங்கள் மக்களை அதிகளவில் சென்றடைந்து விடுகிறது. n மீண்டும் நடிகர் விஜய் அம்மாவாக எப்போது பார்ப்போம்.ஒரு முறை இயக்குனர் தரணியை பார்த்த போது கில்லி பாகம் 2 உண்டா என கேட்டேன். அது இருந்தால் வரும். கில்லி ஒரு மறக்க முடியாத படமாக அமைந்து விட்டது. எனக்கும் விஜய் அம்மாவாக நடிக்க ஆசை உள்ளது.

நடிகர், கதை சொல்லி, நாடகம், விளம்பரம், குரல் கலைஞர் என பன்முக தன்மை கொண்ட உங்களை ஊக்குவிக்கும் விஷயம் எது.
என்னை ஊக்குவிப்பது புன்னகை தான். ஒருவருக்கும் புன்னகையை தவிர வேறு எதையும் கொடுக்க வேண்டாம். புன்னகை ஒரு மகிழ்ச்சியான தொற்று நோய் போன்றது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும். இதயத்தை நாம் திறந்து வைத்திருந்தால் கதைகள் தானாகவே உள்ளே வரும். நீங்கள் தேட வேண்டியதே இல்லை. என் கதைகள், நடிப்பு, கலை படைப்புகள் மூலம் பிறரை மகிழ்விக்க செய்வதே எனது ஊக்குவிப்பு.

தங்களுக்கு குடும்பத்தின் உறுதுணை
கணவர், சகோதரி, மாமியார், மகள் த்வனி என ஒட்டுமொத்த குடும்பமும் எனக்கு உறுதுணையாக உள்ளது. மகள் நல்ல விமர்சகர். மாமியார் என்னை நன்றாக உற்சாகப்படுத்துவார்.

கதை சொல்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது
கவனிப்பதில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு நிறுவனத்தில் நேர்முகத்தேர்வோ அல்லது கருத்தரங்குகளிலோ கதை மூலம் பேசுவது தான் எல்லோர் மனதிலும் நிற்கும். வெறும் தகவல்கள் மனதில் ஒட்டாது. அதை சுவாரஸ்யப்படுத்த கதைகள் அவசியம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.